திருப்பாவை, திருவெம்பாவை ஒப்புவித்தல் கட்டுரை போட்டி
தேனி: தேனி அருகே உள்ள வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு திருப்பாவை, திருவெம்பாவை, ஒப்புவித்தல், கட்டுரை போட்டி நடந்தது. மூன்று பிரிவுகளாக நடந்த போட்டியில் 10 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் 100 பேர் பங்கேற்றனர். முதல் வகுப்பு 5 ம் வகுப்பு வரையும், 6 முதல் 9 ம் வகுப்பு வரை என இரண்டு பிரிவுகளில் ஒப்புவித்தல் போட்டியும், பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை கட்டுரை போட்டியும் நடந்தது.கட்டுரை போட்டியில் திருப்பாவையில் பழனிசெட்டிபட்டி பழனியப்பா மேல்நிலைப்பள்ளி மாணவர் தனசந்தோஷித், தேனி நாடார் சரஸ்வதி மேல்நிலைபள்ளி மாணவர் வெங்கடேஷ், தேனி மேலப்பேட்டை இந்து நாடார் மெட்ரிக் பள்ளி மாணவி அஸ்வத் பிரியதர்ஷினி ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.திருவெம்பாவை போட்டியில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார் மெட்ரிக் பள்ளி மாணவி கவுரி, தேனி நாடார் சரஸ்வதி பெண்கள் பள்ளி அபிராமி, இதே பள்ளியை சேர்ந்த நாகவர்ஷினி முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர். அனைத்து பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.