திருப்பாவை ஒப்புவித்தல் போட்டி: முதல் பரிசை தட்டி சென்ற பார்வை இல்லாத பெண்!
மதுரை: ஸ்ரீகாயத்ரி நாராயண சபா தல்லாகுளம் ஸ்ரீபிரசன்ன வெங்கடேஸ்வர ஸ்வாமி திருக்கோயிலில் திருப்பாவை ஒப்புவித்தல், திருப்பாவை பாசுரங்களை கர்நாடக இசையில் இசைத்தல், முதலிய போட்டிகளை ஜனவரி 10, 11ம் தேதிகளில் நடத்தினர். மதுரையிலுள்ள பல பள்ளிக் குழந்தைகள் 5 முதல் 15 வயதுவரை உள்ளவர்கள் கலந்துக் கொண்டு உற்சாகமாக பரிசுகளைப் பெற்றுச் சென்றனர். 11ம் தேதி மாலை 5 முதல் 7 மணிவரை நடந்த பரிசளிப்பு விழாவில் (குழந்தைகளுக்கு) சிறுவர் சிறுமியருக்கு பரிசுகள் கவிஞர் கூடல் என். ராகவன், (தலைவர் ஸ்ரீகாயத்ரி நாராயண சபா), ஆசிரியர் அடிப்பொடி, (செயலாளர்) பரிசுகள் வழங்கினர்.
ஒப்புவித்தல் போட்டியில், அபிராமி என்கிற 11 வயது பெண், பிறவியிலேயே கண் தெரியாதவர் கலந்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது. அப்பெண் பாசுரங்களை ப்ரெய்லி முறையில் எழுதி மனப்பாடம் செய்து ஒப்புவித்து முதல் பரிசை தட்டிச் சென்றாள். 5 முதல் 10 வயதுள்ள குழந்தைகளில் ஹயக்ரீவன் என்கிற 8 வயது சிறுவன் திருப்பாவை முப்பது பாசுரங்களையும் ஒப்புவித்தும், நல்ல இசை ஞானத்துடன் பாடியும் வந்திருப்பவர்களை அசரவைத்தான். நிவேதா என்கிற பெண் ஒருவாரத்திற்குள் 27 பாசுரங்களை மனப்பாடம் செய்து உற்சாகத்துடன் போட்டியில் கலந்து கொண்டும் 2ம் பரிசினை பெற்றாள். கோயிலில் வேலை செய்யும் பெண்கள் இப்போட்டிகளில் கலந்துக்கொண்ட சிறுவர் சிறுமியினைப் பார்த்து தங்கள் குழந்தைகளையும் அடுத்த வருடம் இப்போட்டிகளில் கலந்துக்கொள்ள செய்வதாக ஆர்வத்துடன் திருப்பாவை புத்தம் பெற்றுச் சென்றனர்.
சபாவின் சார்பில் அடுத்த வருடம் திருப்பாவை ஒப்புவித்தல் போட்டி, இசைப்போட்டி தவிர, புள்ளிவைத்து கோலம் போடும் போட்டி/ அறிவுத்திறன் வளர்க்க, பாசுரங்களில் வரும் கதைகள் சொல்லும் போட்டி, பாசுரங்களை ஓவியமாக வரைதல் போட்டி, மற்றும் பெண்களுக்கு அர்த்தங்களை சொல்லும் போட்டி, பிரசாரங்கள் செய்தல் போட்டி முதலியவை அறிவிக்கப்பட்டன. குழந்தைகள் உற்சாகத்துடன் கலந்து கொள்வதாகவும் தவறாமல் தங்களுக்கு அறிவிக்கும் படியும் தங்கள் விலாசங்களையும் தொடர்புகொள்ள வேண்டிய போன் நம்பரையும் கொடுத்துச் சென்றனர். அறிவும் ஆற்றலும் மிக்க குழந்தைகள் நெறிவுபடுத்தி நல்ல குழந்தைகளாக வளர்க்கவும் ஒரு நல்ல சமுதாய அமைப்பை உருவாக்கவும் இத்திருப்பாவைப் போட்டி உதவும் என்பதா<லும் திருப்பாவையை அனைத்துக் குழந்தைகளும் படித்து ஆண்டாள், ஸ்ரீ ரங்கமன்னார் அருளைப் பெறவும் ஸ்ரீகாயத்ரி நாராயண சபா தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.