உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமபிரானிடம் விபீஷணர் சரணடைந்த சேதுக்கரை கோயிலில் உழவாரப்பணி!

ராமபிரானிடம் விபீஷணர் சரணடைந்த சேதுக்கரை கோயிலில் உழவாரப்பணி!

கீழக்கரை : ராமபிரானிடம் விபீஷணர் சரணடைந்த சேதுக்கரை ஏகாந்த ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயில் குறித்து "தினமலர் வெளியிட்ட செய்தியால், பக்தர்கள் ஆர்வத்துடன் உழவாரப்பணியில் ஈடுபட்டனர். ராமநாதபுரம், திருப்புல்லாணி அருகே சேதுக்கரையில் "சின்னக்கோயில் என அழைக்கப்படும் ஏகாந்த ஸ்ரீனிவாசப்பெருமாள் கோயில் உள்ளது. ராமாயண காவியத்தில் ராமபிரானிடம் விபீஷணர் சரணடைந்தாக கூறப்படும் இக்கோயிலின் மூலஸ்தான கோபுரம், கருவறை, அர்த்தமண்டபம், சிற்பத்தூண்கள் பராமரிப்பின்றி, புதர் மண்டிக் கிடந்தன. மரங்களின் வேர்கள் ஊடுருவி,கோயில் வெளியே தெரியாமல் இருந்தன. இதுபற்றி ஜன., 18 ல் "தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. அதை தொடர்ந்து ராமநாதபுரத்தில் உள்ள "ராமநாம உழவாரப்பணி தொண்டர்கள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் 55 பேர் ஒன்றிணைந்து, பல ஆண்டுகளாக தூய்மை செய்யப்படாமல் இருந்த கோயில் கருவறையை அடுத்த அர்த்த மண்டபத்தில் தேங்கிக்

கிடந்த வவ்வால் கழிவுகளை 2 டிராக்டர் அளவிற்கு அகற்றி சுத்தம் செய்தனர். மேலும், கோயிலின் கோபுர விமானத்தில் படர்ந்திருந்த மரங்களை அகற்றி உழவாரப்பணி செய்தனர். ராமநாதபுரம் வடக்குத்தெருவை சேர்ந்த ராம நாம உழவாரப்பணி ஒருங்கிணைப்பாளர் என்.சந்தான வேலு கூறுகையில்,""கடந்த 1989 முதல் கோயில்களில் உழவாரப்பணி செய்துவருகிறோம். எங்களிடம் 50 க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். பராமரிப்பின்றி, சிதலமடைந்துள்ள பழமை வாய்ந்த கோயில்களை கண்டுபிடித்து, அவற்றில் சேவையாக செய்து வருகிறோம். "தினமலர் நாளிதழில் வந்த செய்தியை பார்த்த பின்புதான், இக்கோயிலிலை தூய்மை செய்யும் பாக்கியம் எங்களுக்கு கிடைத்துள்ளது. இனி வருங்காலங்களில் பக்தர்கள் இக்கோயிலில் எளிதாக சுவாமி தரிசனம் செய்யலாம். கோயிலின் பின்புறம் இடிபாடுகளுக்கு மத்தியில் கருவறை உள்ளது. கோயிலை முழுமையாக திருப்பணி செய்திட இந்து அறநிலையத்துறையின் நடவடிக்கை நிச்சயம் தேவை, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !