பராமரிப்பின்றி.. சமூக விரோதிகளின் கூடாரமாக ஈஸ்வரன் கோவில்!
கனகம்மாசத்திரம்: ஊராட்சியில் உள்ள அம்பாளீஸ்வரர் கோவில், போதிய பராமரிப்பின்றியும், சுற்றுச்சுவர் இல்லாமலும் உள்ளதால், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. திருவாலங்காடு ஒன்றியம், நெமிலி கிராமத்தில் அமைந்துள்ளது அம்பாளீஸ்வரர் கோவில். கோவில் அருகில் குளம் அமைந்துள்ளது. இக்கோவில், இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவிலில், தினசரி ஒரு கால பூஜை நடந்து வருகிறது. பிரதோஷம், சிவாராத்திரி, பவுர்ணமி போன்ற முக்கிய நாட்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. நெமிலி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமவாசிகள் சென்று, காலை மற்றும் மாலை நேரத்தில் வழிபட்டு வருகின்றனர். இந்த நிலையில், போதிய பராமரிப்பு இல்லாததால், கோவில் கோபுரம் மற்றும் கட்டடத்தின் மீது செடிகள் வளர்ந்துள்ளன. கோவிலை சுற்றியும் சுற்றுச்சுவர் இல்லாததால், சிலர் அங்கு சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். எனவே, கோவிலை சுற்றி சுவர் எழுப்பி, பராமரிக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.