குன்றத்தில் மூன்று ஆண்டுகளுக்குப்பின்பு சுவாமியுடன் புதிய யானை வீதி உலா!
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மூன்று ஆண்டுகளுக்குப்பின்பு சுவாமியுடன் புதிய யானைக்குட்டி வீதி உலா சென்றது.
சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருவிழா காலங்களிலும், சுவாமி புறப்பாட்டின் போதும் சுவாமிக்கு முன்பாக வீதி உலா நிகழ்ச்சியிலும், தினம் கொடிக்கம்பம், பலி பீட அபிஷேகத்திற்காக அதிகாலை சரவணப்பொய்கையிலிருந்து வெள்ளிக்குடத்தில் புனிதர் நீர் எடுத்துவரவும், கொடியேற்றத்தின்போது கொடிப்பட்டம் வீதி உலா எடுத்துச் செல்லவும், சூரசம்ஹார நிகழ்ச்சியின்போது சுவாமியின் பிரதிநிதி சூரபத்மனை விரட்டிச் செல்லும் நிகழ்ச்சியில், பட்டாபிஷேக நிகழ்ச்சியிலும் கோயில் யானை ஒவ்வை பயன்படுத்தப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளுக்குமுன்பு ஒவ்வை இறந்தது. அதுமுதல் நடந்த திருவிழாக்களில் யானையின்றி சுவாமி புறப்பாடு இருந்தது. சில மாதங்களுக்குமுன்பு முருக பக்தர் ஒருவரால் அசாமிலிருந்து 7 வயது குட்டி யானை பெறப்பட்டது. தெய்வானை என பெயரிடப்பட்டு, மொழி, பழக்க வழக்கங்கள் கற்றுக் கொடுக்கப்பட்டு வந்தது. தெப்பத்திருவிழாவை முன்னிட்டு முதல்முறையாக புதிய யானைக்குட்டி தெய்வானை, நேற்றுமுன்தினம் முதல் சுவாமியின் முன்பு வீதி உலா நிகழ்ச்சியில் பங்கேற்றது. பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.