உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னிமலை முருகன் கோவில் நாளை தேரோட்டம்!

சென்னிமலை முருகன் கோவில் நாளை தேரோட்டம்!

சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவில் தைப்பூச விழாவில், தேரோட்டம் நாளை காலை நடக்கிறது.அருணகிரி நாதரால் பாடப்பெற்ற புகழ் பெற்ற முருகன் திருதலம் சென்னிமலை. இங்கு தைப்பூச விழா ஆண்டு தோறும், 15 நாட்கள் விமர்சையாக நடக்கும். இந்தாண்டு விழா, கடந்த ஜனவரி, 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

அது முதல் தினமும், முருகப்பெருமான் பல்லக்கு சேவை, மயில் வாகன காட்சி, பஞ்சமூர்த்தி புறப்பாடு, யானை வாகனக்காட்சி, காமதேனு வாகன காட்சி, கைலயங்கிரி வாகன காட்சி என, பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.இன்று, மாலை ஆறு மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத முத்துகுமார ஸ்வாமிக்கு, சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து, 8 மணிக்கு வசந்த திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்கிறது.நாளை (3ம் தேதி) அதிகாலை, 3 மணிக்கு ஸ்வாமிக்கு மகா அபிஷேகமும், காலை, 7 மணிக்கு தேரோட்டமும் நடக்கிறது.

தேரோட்டத்தை சுற்றுச்சுழல் துறை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், வனத்துறை அமைச்சர் ஆனந்தன், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், காங்கேயம் எம்.எல்.ஏ., நடராஜ், கலெக்டர் பிரபாகர் உட்பட பலர் துவக்கி வைக்கின்றனர்.

புதன் கிழமை மாலை, தேர்நிலை வந்து சேருகிறது.வரும், 5ம் தேதி பரிவேட்டை குதிரை வாகன காட்சியும், 6ம் தேதி வெள்ளி கிழமை தெப்போற்சவம், பூதவாகன காட்சியும் நடக்கிறது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, மகாதரிசனம், 7ம் தேதி நடக்கிறது. அன்று காலை, 9 மணிக்கு வள்ளி, தெய்வனை சமேத முத்துக்குமாரஸ்வாமிக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. இரவு மகாதரிசனம் நிகழ்ச்சி நடக்கிறது. இதில், நடராஜபெருமானும், சுப்பிரமணிய ஸ்வாமியும் முறையே வெள்ளி விமானம், வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி, திருவீதி உலா காட்சி நடைபெறுகிறது.அன்று சென்னிமலை முருகனை தரிசிக்க ஆயிரக்காணக்கான பக்தர்கள் திரள்வார்கள். 8ம் தேதி மஞ்சள் நீர் அபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !