மொண்டிபாளையம் கோவிலில் தேரோட்டம்; பக்தர்கள் தரிசனம்!
அன்னுார் : மொண்டிபாளையம் வெங்கடேசப் பெருமாள் கோவில் தேரோட்டம், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நேற்று நடந்தது.
மேலத்திருப்பதி என்றழைக்கப்படும் மொண்டிபாளையம், வெங்கடேசப் பெருமாள் கோவிலில்,51ம் ஆண்டு தேர்த்திருவிழா கடந்த, 27 ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 30ம் தேதி வரை தினமும் இரவு, 8:00 மணிக்கு பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதியுலா நடந்தது. 31ம் தேதி காலை, 10:00 மணிக்கு, அம்மன் அழைத்தல், சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடந்தது.நேற்று காலை, 5:30 மணிக்கு வெங்கடேசப் பெருமாள் தேருக்கு எழுந்தருளினார். மதியம், 12:00 மணிக்கு, தேரோட்டம் துவங்கியது.
எம்.எல்.ஏ., கருப்பசாமி, அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி, செயல் அலுவலர் பெரிய மருது பாண்டியன் உள்ளிட்டோர் வடம் பிடித்து, துவக்கி வைத்தனர்.பக்தர்கள், கோவிந்தா, கோவிந்தா என கோஷம் எழுப்பியபடி, பழங்களை தேரின் மீது வீசினர். தாசராபாளையம், ஆலத்துார், கானுார், பொங்கலுார் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர். மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. வரும், 3ம் தேதி இரவு பரிவேட்டையும், 4ம் தேதி, சேஷ வாகனத்தில் சுவாமி திருவீதியுலாவும்நடக்கிறது.