நத்தம் மாரியம்மன் கோயிலில் காப்பு கட்டிய பக்தர்கள்!
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோயில் மாசிப்பெருந்திருவிழாவை முன்னிட்டு பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கரந்தன்மலை கன்னிமார் தீர்த்தக்குடங்கள் எடுத்து மஞ்சள் காப்புக்கட்டினர். தென்மாவட்டங்களில் பிரபலமானது நத்தம் மாரியம்மன் கோயில். இக் கோயிலின் மாசித்திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி நேற்று பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நேர்த்திக்கடனுக்காக உலுப்பக்குடி அருகே, கரந்தன் மலை கன்னிமார் கோயில் அருவியில் தீர்த்தக்குடங்கள் எடுத்து வந்தனர்.
சந்தனக்கருப்பு கோயிலில் வைத்து கருப்புச்சாமியை வழிபட்டு, தலைமை பூஜாரி தீர்த்தக்குடம் சுமந்தப்படி வர அவரை பின்தொடர்ந்தனர். பக்தர்கள் கோவிந்த கோஷத்துடன் ஊர்வலமாக மாரியம்மன் கோயிலுக்கு வந்தனர்.பின் தீர்த்தத்தால் அபிஷேகமும், அர்ச்சனையும் செய்தனர். நேர்த்திக் கடனுக்காக கைகளில் மஞ்சள் துணியில் அம்மன் படமும், மஞ்சள் கிழங்கிலான காப்புகளையும் கட்டிக்கொண்டனர். திருவிழாவில் முக்கிய விசேஷங்களாக நேற்றிரவு அம்மன் குளத்திலிருந்து கம்பம் அழைத்து வரப்பட்டார். வரும் மார்ச் 10 ல் வழுக்கு மரம் ஏறுதல், பூக் குழி இறங்குதல், 11ல் அம்மன் பூப் பல்லக்கில் நகர் வலம் வருதல் நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ஞானசேகரன், பரம்பரை பூஜாரிகள் சொக்கையா, சின்னராஜூ, நடராசு, கிருஷ்ணமூர்த்தி, சுரேஷ் செய்திருந்தனர்.