பொதுத்தேர்வு மாணவருக்கு பெருமாள் கோவிலில் யாகம்!
திருப்பூர்: பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்காக, திருப்பூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவிலில், நாளை சிறப்பு யாகம் நடைபெற உள்ளது.பெருமாளின் அவதாரங்களில் சிறப்பானதாக, ஹயக்கிரீவர் அவதாரம் குறிப்பிடப்படுகிறது. மனித உடலும், குதிரை முகமும் கொண்ட ஹயக்கிரீவர், படைக்கும் தொழில் கொண்ட பிரம்மாவின் அறியாமையை போக்கி, அவருக்காக உபதேசிக்கப்பட்ட வேதங்களை கடலில் இருந்து மீட்டதாக, புராணங்கள் கூறுகின்றன. அவரை வழிபட்டால் அறியாமை விலகி, நல்ல புத்தி, கல்வி, கேள்விகளில் சிறப்பு, மன உறுதி, வெற்றி கிடைக்கும்; கல்வி பயிலும் மாணவர்கள், ஹயக்கிரீவரை வழிபட்டால், மேன்மை அடைவர் என்பது, ஐதீகம்.கல்விக்கு உகந்த ஹயக்கிரீவர், திருப்பூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவிலில் மகாலட்சுமியுடன், லட்சுமி ஹயக்கிரீவராக வீற்றுள்ளார். தற்போது 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், அதிக மதிப்பெண் பெற்று, மாநில அளவில் சிறப்பான தேர்ச்சி பெறுவதற்காக, திருப்பூர் திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை சார்பில், 3 வாரங்களுக்கு சிறப்பு யாகம் மற்றும் விசேஷ பூஜை நடைபெற உள்ளது. நாளை காலை 9:00க்கு சிறப்பு யாகம், 10:30க்கு மூலவர் திருமஞ்சனம், 11:00க்கு நாம சங்கீர்த்தனம் மற்றும் சாத்து மறை, மகா தீபாராதனை, பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. வரும் 8 மற்றும் 15ம் தேதிகளிலும், சிறப்பு யாகம் நடக்கின்றன. பொதுத்தேர்வு எழுத உள்ள அனைத்து மாணவ, மாணவியரும், பெற்றோருடன் பங்கேற்கலாம்; அனுமதி இலவசம்.