வனகாளியம்மன் கோயில் விழாவில் வனத்துறையினர் கட்டுப்பாடு!
மூணாறு : ராஜமலையில் வன காளியம்மன் கோயில் திருவிழாவிற்கு போலீசார் பலகட்டுப்பாடுகளை விதித்ததால் பொதுமக்கள் குறைந்த அளவிலேயே விழாவில் பங்கேற்றனர்.
மூணாறு அருகே இரவிகுளம் தேசிய பூங்காவுக்கு உட்பட்ட ராஜமலையில், வன காளியம்மன் கோயில் உள்ளது. பலதலைமுறைகளாக ராஜமலை, பெட்டிமுடி போன்ற பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் பொங்கல் வைத்து கிடா வெட்டி வழிப்பட்டு வந்தனர்.
இயற்கை சூழலில் நடக்கும் திருவிழாவைக் காண பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் திரள்வது வழக்கம். தேசிய பூங்காவுக்கு உட்பட்ட பகுதியில் கோயில் உள்ளதால் இங்கு திருவிழா நடத்துவதற்கு வனத்துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தனர். துவக்கத்தில் "மைக் செட் மற்றும் மேள தாளத்துடன் திருவிழா நடத்தப்பட்டது. இவற்றின் ஒலி வனவிலங்குகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்துவதாக கருதி இவற்றிற்கு தடை விதிக்கப்பட்டது. பத்தி, சூடம் ஏற்றக் கூடாது என்றும் கூறினர். இந்நிலையில் பெட்டிமுடி மற்றும் ராஜமலையைச் சேர்ந்த மக்கள் கோயிலில் கிடா வெட்டி வழிபாடு நடத்துவதற்கு முடிவு செய்தனர். கிடா வெட்டுவதற்கு வனத்துறையினர் தடை விதித்தனர். இருப்பினும் வழக்கபடி கோயிலில் வழிபாடு நடத்தப் போவதாக மக்கள் தெரிவித்ததால் வன காளியம்மன் கோயில் பகுதியில், மூணாறு எஸ்.ஐ., சோனிமத்தாயி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மூணாறு வன உயிரின உதவி பாதுகாவலர் சஞ்சய் தலைமையில் வனத்துறையினரும் குவிந்ததால், பதட்டமான சூழல் ஏற்பட்டது. இதனால் பெரும் திரளாக கொண்டாடாப்பட்டு வந்த திருவிழாவில் குறைந்த எண்ணிக்கையில் பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.