செல்லாண்டியம்மன் கோவில் குண்டம் திருவிழா கோலாகலம்
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம், செல்லாண்டியம்மன் கோவிலில் நடந்த குண்டம் விழாவில், திரளான பக்தர்கள், தீ மிதித்து நேர்த்தி கடனை நிறைவு செய்தனர். சத்தியமங்கலம் அருகே அரியப்பம்பாளையத்தில், செல்லாண்டியம்மன், காமாட்சியம்மன் மற்றும் மாரியம்மன் கோவில்களில் குண்டம் விழா நிகழ்ச்சி கடந்த, 17ம் தேதி, பூச்சாட்டுதலுடன் துவங்கியது. கடந்த, 20ம் தேதி திருப்பறை சாட்டுதல் நிகழ்ச்சியும், 24ம் தேதி கம்பம் நடப்பட்டது. தினமும், இளைஞர்கள் கம்பத்தை சுற்றிலும் ஆடி, பாடி மகிழ்ந்தனர். மாரியம்மன் கோவில் வளாகத்தில் நடப்பட்ட கம்பத்துக்கு, ஏராளமான பெண்கள் தண்ணீர் ஊற்றி மஞ்சள், குங்குமம் வைத்து வழிபட்டனர். கடந்த, 2ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது.விழாவின் முக்கிய நிழ்வான பக்தர்கள் தீ மிதிக்கும் குண்டம் விழா, நேற்று காலை நடந்தது. நேற்று அதிகாலையில், தீ மிதிக்கும் பக்தர்கள், பவானி ஆற்றுக்கு சென்று, புனித நீராடி, ஈரத்துணியுடன் கோவில் முன் அமைக்கப்பட்ட, 60 அடி தீ குண்டத்தில், பூசாரி ராசு இறங்கினார். அவரை தொடர்ந்து, ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என வரிசையாக தீ மிதித்து, தங்கள் நேர்த்தி கடனை நிறைவு செய்தனர். குண்டம் விழாவை முன்னிட்டு, பத்தாயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.தொடர்ந்து, மதியம் மாவிளக்கு பூஜையும், அக்கினி கும்பம் எடுத்தலும், மாலையில் கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று இரவு, 9 மணிக்கு அம்மன் முத்து பல்லாக்கில் நகர் வலம் வந்து, காட்சியருளினார். அப்போது, அரியப்பம்பாளையம் புளியம்பட்டி பிரிவில் வான வேடிக்கை நிகழ்ச்சி நடந்தது.இன்று, மஞ்சள் நீர் உற்சவம் நடக்கிறது. வரும், 10ம் தேதி மறுபூஜையுடன் குண்டம் விழா நிறைவடைகிறது.