பிரம்மன் கட்டிய பிரமலிங்கேஸ்வரர் கோவில் திருப்பணிகள் தீவிரம்!
சென்னிமலை: சென்னிமலை அடுத்த முருங்கத்தொழுவின் வடக்கே, பண்டைய வெள்ளோடு வழியின் மேற்புறம், பிரம்மன் பிரதிஷ்டை செய்து வணங்கிய, பிரமலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. 2,000 ஆண்டு பழமையானது. இங்குள்ள கல்வெட்டில், 1,200 ஆண்டுகளுக்கு பின், சுந்தரபாண்டிய மன்னன், திருப்பணிகள் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கோவிலில், 16 ஏக்கரில் திருக்குளம் அமைந்துள்ளது. இத்தீர்த்தத்தை பிரம்ம தீர்த்தம் என அழைக்கின்றனர். இக்கோவிலின் பரம்பரை அர்ச்சகர் அமிர்தலிங்க குருக்கள் கூறியதாவது: வழக்கமாக சிவன் கோவில்கள் கிழக்கு நோக்கி இருக்கும். பிரமலிங்கேஸ்வரர் கோவிலில், சிவன் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இங்கு அழகிய வேலைப்பாட்டுடன், நந்தியம் பெருமான் கிழக்கு நோக்கி அருள் புரிகிறார். இங்கு மேற்கு நோக்கி, வடிவுள்ள மங்கை என்ற அம்மன் அமைந்துள்ளார்.கருவறை, அர்த்தமண்டபம், மகா மண்டபம் என, மூன்று பகுதிகளாக, சிவன் சன்னதி அமைந்துள்ளது. பொதுவாக கோவிலின் வெளியே இருக்கும் துவஜஸ்தம்பம், மேற்கு பிரகாரத்தில் மண்டபத்துடன் உள்பகுதியிலேயே அமைந்துள்ளது.
வடக்கு பிரகாரத்தில், திருமகளுக்கு மூத்த ஜேஷ்டாதேவியின் (மூதேவி) உருவச்சிலை உள்ளது. ஜேஷ்டாதேவி வழிபாடு, எதிர்மறையான ஒரு வழிபாடு என்றாலும், தொன்மையான வழிபாட்டை இது காட்டுகிறது. இங்குள்ள பிரமலிங்கேஸ்வரரை முருகப்பெருமான், இக்குளத்தில் குளித்து வழிப்பட்டதால், இந்த ஊர் "முருகன் தொழுவு என்றாகி, தற்போது, முருங்கத்தொழுவு, என அழைக்கின்றனர். இக்கோவிலில், நான்கு ஆண்டுகளுக்கு மேலாக திருப்பணிகள் நடக்கிறது. தற்போது அம்பாள் வடிவுள்ள மங்கை சன்னதி, கன்னி மூலகணபதி, சுப்பிரமணியர், தட்சிணாமூர்த்தி, சந்திரன், சூரியன், பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர், தனி சனீஸ்வரர், நவக்கிரகம், காலபைரவர் உட்பட பரிவார தெய்வ கோவில்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அர்த்த மண்டபம், ஷோபன மண்டபம் ஆகியவையும் புதிதாக அமைத்துள்ளனர். புதிய தீபஸ்தம்பம், குளத்தின் நடுவில் பெரிய நந்தியம் பெருமான் ஆகியவை அமைக்க திட்டமிட்டு பணிகள் நடக்கிறது. கோவில் நந்தவனத்தில், ஒவ்வொரு ராசிக்கும், ஒரு மரம் வளர்க்கப்பட்டு வருகிறது.இங்கு, மே, 1ம் தேதி கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. பூஜை மற்றும் வழிபாடு செய்ய, அர்ச்சகர் அமிர்தலிங்க குருக்களை, 97903 25929 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். ஈரோடு பஸ் ஸ்டாண்டில் இருந்தும், சென்னிமலையில் இருந்தும், பஸ் வசதி உள்ளது.