உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமநாதபுரத்தில் முதுமக்கள் தாழி பெருங்கற்கால சின்னம் கண்டுபிடிப்பு!

ராமநாதபுரத்தில் முதுமக்கள் தாழி பெருங்கற்கால சின்னம் கண்டுபிடிப்பு!

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே செங்கமடையில் 3,000 ஆண்டு பழமையான பெருங்கற்கால சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இம்மாவட்டத்தில் முதன் முறையாக முதுமக்கள் தாழி கண்டறியப்பட்டு உள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்தில் கி.பி.,1711 முதல் 1725 வரை ஆட்சி செய்த விஜய ரகுநாத சேதுபதி, பிரஞ்சு வல்லுனர்களை கொண்டு வட்ட வடிவ கோட்டைகளை கட்டினர். அதில் ஒன்றான கமுதிக்கோட்டை தொல்லியல் துறையின் பராமரிப்பில் உள்ளது. மற்றொன்று ஆர்.எஸ்.மங்கலத்தில் இருந்து 3 கி.மீ.,ல் செங்கமடையில் உள்ளது. செங்கமடை கோட்டையில் ராமநாதபுரம் அரண்மனை காப்பாட்சியர் சக்திவேல், திருப்புல்லாணி தொன்மைப் பாதுகாப்பு மன்ற பொறுப்பாசிரியர் ராஜகுரு ஆய்வு செய்தனர். அப்போது முதுமக்கள் தாழிகள், கறுப்பு, சிவப்பு மண்பாண்ட ஓடுகள், மண் குவளைகள், குவளை தாங்கிகள் இருந்தன. இது ௩000 ஆண்டுகளுக்கு (பெருங்கற்காலம்) முற்பட்டது என தொல்லியல் வல்லுனர்கள் கணித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: இங்கு எடுக்கப்பட்ட கறுப்பு, சிவப்பு மண்பாண்ட ஓடுகள் ஈமச்சடங்கு சின்னங்கள் என தெரிகிறது. மேலும், குளத்தின் உள் பகுதியில் முழுமையாகவும், சிதைந்த நிலையிலும் முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்தில் இவை கிடைப்பது இதுவே முதன்முறை என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !