உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்!

தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்!

இடைப்பாடி: இடைப்பாடி அருகே, கவுண்டம்பட்டி மாரியம்மன் கோவில் விழாவில், தலையில் தேங்காய் உடைத்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இடைப்பாடி அருகே உள்ள, கவுண்டம்பட்டி சின்னமாரியம்மன் கோவில் விழா கடந்த பிப்ரவரி, 24ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 15 நாட்களாக தினமும் மாரியம்மன் பல்வேறு அவதாரங்களில் வீதி உலா வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான மாரியம்மன் கல்யாண உற்சவம் நேற்று நடந்தது. கவுண்டம்பட்டி, சரபங்கா ஆற்றில் அலகு குத்திக்கொண்டு, ஸ்வாமி ஊர்வலம் நடந்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மாவிளக்கு தட்டுடன் ஊர்வலம் சென்றனர்.அப்போது, மாவிளக்கு தட்டில் உள்ள தேங்காய்களை பூசாரி எடுத்து, ஸ்வாமி ஊர்வலம் வரும்போது, ஸ்வாமி முன்பு உட்காரும் அனைத்து பக்தர்களின் தலையிலும் தேங்காய் உடைத்தார். வேண்டுதல் நிறைவேற வேண்டும் என, ஸ்வாமியை வேண்டிக்கொண்டு, தலையில் தேங்காய் உடைத்தால், வேண்டுதல் நிறைவேறிவிடும் என்பது ஐதீகம். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற, தலையில் தேங்காய் உடைத்துக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !