சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் வசந்த நவராத்திரி துவக்கம்!
சேலம்: சேலம், சுகவனேஸ்வரர் கோவிலில், நாளை வசந்த நவராத்திரி விழா துவங்கி, மார்ச், 28 வரை நடக்கிறது. சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில், வசந்த நவராத்தியை முன்னிட்டு, நாளை முதல், மார்ச், 27 வரை தினம் தோறும் மாலையில் சொர்ணாம்பிகை அம்மனுக்கு, குங்கும லட்சார்ச்சனை நடக்கிறது. அம்மனுக்கு, 16 வகையான உபச்சாரங்கள் வேத மந்திரங்கள் முழங்க நடக்கிறது.மார்ச், 28 காலை, ஸ்ரீராமநவமியை முன்னிட்டு, 108 மூலிகைகளால் லலிதா சகஸ்ரநாம ஹோமம் நடக்கிறது. நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு, மார்ச், 21 முதல், 28 வரை, இன்னிசை கச்சேரி உட்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.மார்ச், 29 மாலையில், சொர்ணாம்பிகையின் உற்சவ விக்ரகத்திற்கு சிறப்பு பூஜை நடக்கிறது. சுகவனேஸ்வரர், மகாநந்தீசுவரர், அதிகார நந்தீசுவரர், நிருத்த கணபதி, தட்சணாமூர்த்தி, இரட்டை விநாயகர், சாஸ்தா, பிச்சாடனார், சரஸ்வதி, துர்க்கை, ஆஞ்சநேயர், பைரவர், சூரியன் ஆகிய தெய்வங்களுக்கு வெள்ளிக்கவசம் சாத்துபடி செய்யப்படுகிறது. அதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு லட்சார்ச்சனை செய்யப்பட்ட குங்குமம், அன்னதானத்துடன் வழங்கப்படுகிறது.