மெட்டீரியல் ரோப்கார் நிறுத்தம்: வின்ச்ல் செல்லும் பழநி பஞ்சாமிர்தம்!
பழநி: பழநி கோயில் மெட்டீரியல் ரோப்கார் விபத்து காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. இன்று பாதுகாப்பு குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர். வின்ச் மூலம் பஞ்சாமிர்தம் மலைக்கு கொண்டு செல்லப்படுகிறது. பழநி மலைக் கோயிலுக்கு பஞ்சாமிர்த டப்பாக்களை ஏற்றிசெல்லும் மெட்டீரியல் ரோப் கார் நேற்று முன்தினம் அறுந்து விழுந்தது. அதை சரி செய்யும் பணி தற்போது நடக்கிறது. இந்நிலையில், மலைக்கோயிலுக்கு இரண்டாம் எண் வின்ச்-ல் டிராலி மூலம் பஞ்சாமிர்தம், பூஜை பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இதனால் மற்ற இரண்டு வின்ச்களில் செல்ல பக்தர்கள் காத்திருந்தனர்.கோயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது: பக்தர்கள் செல்லும் ரோப் காரில் எல்லாமே புது பாகங்கள் தான். மாதந்தோறும் பராமரிப்பு பணி நடக்கிறது. காலையில் வெறும் பெட்டிகளை வைத்து சோதனை ஓட்டம் நடத்திய பிறகே இயக்குகிறோம். பக்தர்கள் அச்சப்பட தேவையில்லை. ரோப்கார் பாதுகாப்பு வல்லுனர் குழுவினர் இன்று ஆய்வு செய்ய உள்ளனர். பின், மெட்டீரியல் ரோப் கார் சீரமைக்கப்பட்டு, ஒரு வாரத்தில் இயக்கப்படும் என்றார்.