உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலையில் பங்குனி உத்திர விழா!

சபரிமலையில் பங்குனி உத்திர விழா!

சபரிமலை: சபரிமலையில் 10 நாட்கள் நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழா, பம்பையில் ஆராட்டுடன் நிறைவு பெற்றது. சித்திரை விஷூவுக்காக வரும், 10ம் தேதி மாலையில் நடை திறக்கப்படுகிறது. சபரிமலையில் பங்குனி உத்திரம், ஒன்பதாம் நாள் விழாவில், இரவு அத்தாழபூஜைக்கு, சுவாமி, யானை மீது, வில் அம்பு பரிவாரங்களுடன் சரங்குத்திக்கு எழுந்தருளினார். அங்கு, அசுரகணங்களை அழிக்கும் பள்ளிவேட்டை நடைபெற்றது. பின், கோவிலுக்கு எழுந்தருளிய சுவாமி, கோவில் மண்டபத்தில் பள்ளி உறங்கினார். நேற்று அதிகாலை நடை திறந்ததும், சுவாமியை கோவிலுக்குள் ஆவாகிக்கும் நிகழ்ச்சி நடந்தது. காலை, 7:00 மணிக்கு உஷபூஜைக்கு பின் ஆராட்டு பவனி பம்பைக்கு புறப்பட்டது. சுவாமி, யானை மீது, மேளதாளங்களுடன் புறப்பட்டு பம்பை வந்தார். பம்பை ஆராட்டு குளத்தில், தந்திரி கண்டரரு ராஜீவரரு, ஆராட்டு விக்ரகத்துக்கு பால், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம், குங்குமம், மஞ்சள் போன்ற வற்றால் அபிஷேகம் செய்தார். தொடர்ந்து, ஆராட்டு விக்ரகத்துடன் தந்திரியும், மேல்சாந்தியும் குளத்தில் மூழ்கி எழுந்த தும் சடங்குகள் நிறைவு பெற்றன. மாலை, 4:00 மணிக்கு ஆராட்டு பவனி சன்னிதானத்துக்கு புறப்பட்டது. இரவில் சன்னிதானம் வந்ததும், கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெற்றது. சித்திரை விஷூ பூஜைகளுக்காக சபரிமலை நடை வரும், 10ம் தேதி மாலை, 5:30 மணிக்கு திறக்கப்படுகிறது. விஷூ கொண்டாட்டம் வரும், 15ம் தேதி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !