உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வயலூர் முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா

வயலூர் முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா

திருச்சி: திருச்சி அருகே உள்ள வயலூர் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். நடப்பாண்டு பங்குனி உத்திர திருவிழா, நேற்று துவங்கியது. அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, அதிகாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள், கோவிலுக்கு பால்காவடி எடுத்து வந்து, ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்தனர். திருச்சி மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்காவடி எடுத்து வந்ததால், கோவில் வளாகத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. திருவிழாவை முன்னிட்டு கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. நடைபாதையாக வந்த பக்தர்களுக்கு ஆங்காங்கே நீர் மோர் வழங்க, பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன. நேற்றிரவு 10 மணிக்கு சிங்கார வேலர் வெள்ளிமயில் வாகனத்தில் எழுந்தருளி, திருவீதி உலா வந்தார். நாளை 5ம் தேதி இரவு 8 மணிக்கு வள்ளிநாயகி தினைப்புனம் காத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 6ம் தேதி இரவு 8 மணிக்கு, முருகன் வேடன் விருத்தனாக வருதல் நிகழ்ச்சியும், யானை விரட்டல் காட்சியும் நடக்கிறது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக, 7ம் தேதி காலை 10.45 மணிக்கு மேல் 11.45 மணிக்குள், வள்ளி திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் கதிரேசன், மற்றும் பணியாளர்கள் செய்துள்ளனர். திருவிழாவை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதேபோல் திருச்சி ஜங்சன் வழிவிடுவேல்முருகன் கோவிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ஸ்வாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !