மெட்டாலா ஆஞ்சநேயர் கோவிலில் பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன்!
ராசிபுரம் : மெட்டாலா ஆஞ்சநேயர் கோவில் திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி, ஸ்வாமி நேர்த்திக்கடன் செலுத்தினர். ராசிபுரம் அடுத்த மெட்டாலாவில், பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. குடவறைக் கோவிலான இக்கோவிலில், ஆண்டுதோறும் குண்டம் விழா வெகுவிமரிசையாக நடக்கும். இந்த ஆண்டு விழா, நேற்று முன்தினம் துவங்கியது.சீராப்பள்ளி செவ்வந்தீஸ்வரர் கோவிலில் இருந்து, ஆஞ்சநேயர் உற்சவ மூர்த்தியை நாமகிரிப்பேட்டை எடுத்து வந்தனர். அன்று இரவு, பந்தசேர்வை, ஸ்வாமி திருவீதி உலா, சிறப்பு வாணவேடிக்கை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.நேற்று, காலை, 10 மணிக்கு நாமகிரிப்பேட்டையில் இருந்து கோவிலுக்கு உற்சவர் ஸ்வாமி எடுத்துச் செல்லப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. மேலும், கன்னிமார் ஊற்றிலிருந்து ஸ்வாமிக்கு சக்தி அழைத்தல், கோரையாறு தனியார் மில்லில் ஸ்வாமி நீராடுதல் நிகழ்ச்சி நடந்தது. மாலை, 4 மணிக்கு, பல்லக்கில் தூக்கி வந்த உற்சவ மூர்த்தி, கோவில் முன் அமைக்கப்பட்டுள்ள குண்டத்தில் இறங்கினார். அதை தொடர்ந்து, ஆண், பெண் பக்தர்கள் என, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், புனித நீராடி குண்டத்தில் இறங்கி, தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.தொடர்ந்து, ஆஞ்சநேயர் ஸ்வாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சபாநாயகர் தனபால், நாமகிரிப்பேட்டை யூனியன் சேர்மன் பொன்னுசாமி, துணைத் தலைவர் கணேசன், ஆர். புதுப்பட்டி டவுன் பஞ்சாயத்து சேர்மன் மணி, கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணன், பக்தர்கள் என, ஏராளமானோர் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர்.