திருத்தணி முருகன் கோவிலில் நாளை 1,008 பால்குட ஊர்வலம்
திருத்தணி: திருத்தணி முருகன் கோவில் மற்றும் மத்துார் மகிஷாசூரமர்த்தினி அம்மன் ஆகிய கோவில்களில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, 1,008 பால்குட ஊர்வலம், நாளை நடைபெறுகிறது.திருத்தணி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டு தினத்தன்று, 1,008 பால்குட ஊர்வலம் நடக்கிறது. நந்தி ஆற்றக்கரையோரம் உள்ள கோட்ட ஆறுமுக சுவாமி கோவில் வளாகத்தில் இருந்து, காலை, 8:00 மணிக்கு, 1,008 பக்தர்கள் பால்குடம் தலையில் சுமந்தவாறு, முக்கிய வீதிகள் வழியாக, மலைப்படிகள் வழியாக மலைக்கோவில் சென்றடைவர். பின், காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமானுக்கு, 1,008 பால்குட அபிஷேகம், சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. தமிழ் புத்தாண்டை ஒட்டி, இன்று, (திங்கட்கிழமை) இரவு முழுவதும் கோவில் நடை திறந்திருக்கும். அதேபோல், திருத்தணி ஒன்றியம், மத்துார் பகுதியில் உள்ள முருகன் கோவிலின் உபகோவிலான மகிஷாசூரமர்த்தினி அம்மன் கோவிலிலும், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாளை காலை, 1,008 பால்குட ஊர்வலம் நடைபெறுகிறது.