தமிழ்புத்தாண்டு : திருச்செந்தூர் முருகனுக்கு அன்னாபிஷேகம்!
தூத்துக்குடி: தமிழ்புத்தாண்டு தினமான நேற்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் சித்திரை விசு கொண்டாடப்பட்டது. அஸ்திர தேவர் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. சுவாமி சுண்முகருக்கு அன்னாபிஷேகம் நடந்தது. முருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் கோயிலில், வழக்கமாக காலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். தமிழ்புத்தாண்டு தினமான நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5 க்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலை 8.20 க்கு, அஸ்திரதேவரின் வேல் எடுத்து வரப்பட்டு, கடலில் தீர்தவாரி நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். காலை 10 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தது. காலை 9மணிக்கு கலையரங்கில் நாதஸ்வர மங்கள இசை நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து 10 மணிக்கு கோயில் நாட்குறிப்பு வெளியிடும் நிகழ்ச்சி நடந்தது. பின் ஆன்மிக சொற்பொழிவும், இன்னிசைக்கச்சேரியும் நடந்தது . பகல் 11 மணிக்கு சுவாமி சண்முகருக்கு அன்னாபிஷேகமும், 12 மணிக்கு அன்னதானமும் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் இணை கமிஷனர் ஞானசேகரன், தக்கார் கோட்டை மணிகண்டனும் செய்திருந்தனர்.