தமிழ் புத்தாண்டை முன்னிட்டு புதுச்சேரி கோவில்களில் சிறப்பு பூஜை!
புதுச்சேரி: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. தமிழ்ப் புத்தாண்டு மன்மத ஆண்டாக நேற்று பிறந்தது. இதையொட்டி, அனைத்து கோவிகளிலும் சிறப்பு பூஜை நடந்தது. புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில், காலை முதல் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
சீரடி சாயிபாபா: பிள்ளைச்சாவடி சீரடி சாயிபாபா கோவிலில் நேற்று காலை மற்றும் மாலை வேளைகளில் சிறப்பு அபிஷேகம், சாயி பஜனை, ஆரத்தி நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
வன்னிய பெருமாள் கோவில்: முதலியார்பேட்டை வன்னிய பெருமாள் கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, சிறப்பு திருமஞ்சனம் மற்றும் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. காலை 6.00 மணி முதல் மதியம் 12.௦௦ மணி வரை பெருமாள், கனகவள்ளி தாயார், ஆண்டாள், சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயர், லட்சுமி ஹயக்ரீவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. காலை 11.30 மணிக்கு பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி சீனுவாசன் மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.