உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்: கம்பம் கோயில்களில் குவிந்த பக்தர்கள்

தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்: கம்பம் கோயில்களில் குவிந்த பக்தர்கள்

கம்பம் : தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சுருளி அருவியில் குளிப்பதற்கு பொதுமக்கள் கூட்டம் குவிந்தது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று காலை முதல் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சுருளி அருவி, வீரபாண்டி, வேலப்பர் கோயில், தீர்த்ததொட்டி, உப்புத்துறை ஆகிய கோயில்களுக்கு தேனியில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. பெரியகுளம், ஆண்டிபட்டி, உப்புத்துறைக்கும், பெரியகுளம், ஆண்டிபட்டி, உசிலம்பட்டிக்கும் பஸ்கள் விடப்பட்டன. தேனி வீரப்ப அய்யனார் கோயிலில் நேற்று காலை 4 மணி முதல் பக்தர்கள் குவிந்தனர். ஒரே நாளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் குவிந்ததால், நெரிசல் ஏற்பட்டது.அல்லிநகரத்தில் இருந்து வீரப்பஅய்யனார் கோயில் வரை நான்கு கி.மீ., தூரம் உள்ள ரோடும் பக்தர்கள் நெரிசலில் வழிந்தது. நான்கு கி.மீ., தூரமும் ரோட்டோரம் காலை முதல் மாலை வரை நீர் மோர் பந்தல், அன்னதானம் வழங்கப்பட்டது.

வீரபாண்டியில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். முல்லை பெரியாற்றில் குளித்து அம்மனையும், கண்ணீஸ்வரமுடையாரையும் வழிபட்டனர். சுருளி அருவியில் பக்தர்கள் கூட்டம் குவிந்தது. நேற்று முன்தினம் பெய்த திடீர் மழை காரணமாக அருவியில் தண்ணீர் கொட்டத் துவங்கியது. ராயப்பன்பட்டி சண்முகநாதன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதிகாலை முதல் பக்தர்கள் பூஜைகளில் பங்கேற்றனர். உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் இந்த சிறப்பு பூஜைகளில் பங்கேற்றனர். அன்னதானம் நடைபெற்றது.கம்பம் வேலப்பர் கோயில், கம்பராயப் பெருமாள் கோயில், கவுமாரியம்மன் கோயில்களில் சிறப்பு அலங்காரங்களில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளினர். அரசு போக்குவரத்துக்கழக கோட்ட மேலாளர் அறிவானந்தம் கூறியதாவது: நேற்று மாவட்டத்தில் 385 பஸ்களும் இயங்கின. அனைத்து கோயில்களுக்கும் சிறப்பு பஸ்கள் விடப்பட்டன. பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் தடையின்றி போக்குவரத்து வசதி செய்யப்பட்டது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !