அலகுமலை கோவிலில் சித்திரை திருவிழா
பொங்கலூர், அலகுமலை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி கோவிலில் சித்திரை திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது; காலை 6:00 மணிக்கு கிரிவலம் நடந்தது. "ஆம்ஸ்ட்ராங் நிட்டிங் மில் உரிமையாளர் பழனிசாமி, கிரிவலத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். உற்சவருக்கு கனி அலங்காரம் செய்யப் பட்டது. 7:30 மணிக்கு மேல், அபிஷேகம் மற்றும் பால்காவடி, சிறப்பு வழிபாடு, இன்னிசை, அன்னதானம், மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.
அதன்பின், திருக்கோவில் பக்தர் பேரவை சார்பில் சித்திரை திருவிழா நடந்தது. திருப்பணிக்குழு தலைவர் சின்னு தலைமை வகித்தார். பேரவை அமைப்பாளர் ஞானபூபதி வரவேற்றார். விவேகானந்தா வித்யாலயா பள்ளி கல்வி ஆலோசகர் சுவாமிநாதன், பஞ்சாங்கம் படித்தார். "கடோபநிடதம், "ஒரு மாபெரும் அரசியல் பேரியக்கம் ஆகிய நூல்களை, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகம் வெளியிட்டார். பக்தர் பேரவை நிறுவனர் சண்முகநாதன் பேசுகையில், ""இந்து என்றால் பரம்பொருள் என்று பெயர். உலகில் மிக உயர்ந்த கருத்துக்கள் வேதங்களில் உள்ளன. கீதையை எதிர்ப்பது கிருஷ்ண பகவானையே எதிர்ப்பதற்குச் சமம். குழந்தைகளுக்கு இந்து மதத்தின் பெருமையை சொல்ல வேண்டும்; அவர்கள் வாழ்நாள் முழுவதும் தர்மநியதியுடன் வாழ்வர். குடும்பத்துடன் கோவிலுக்குச் செல்ல வேண்டும்; மனம் கங்கை போல் புனித மாகும். நாம், நெல்லிக்காய் மூட்டை போல் சிதறியுள்ளோம்; சமுதாயத்தை ஒற்றுமைப்படுத்த கூட்டு வழிபாடு செய்ய வேண்டும், என்றார். இணை பேராசிரியர் சிதம்பரம், அருள்நெறி வார வழிபாட்டு குழு தலைவர் ரத்தினம், பக்தர் பேரவை இணை அமைப்பாளர் வேணுகோபால், கரட்டுப்பாளையம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க தலைவர் சுப்ரமணி உட்பட பலர் பங்கேற்றனர்.