உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவகங்கை கோயில்களில் தமிழ் புத்தாண்டு பூஜை

சிவகங்கை கோயில்களில் தமிழ் புத்தாண்டு பூஜை

சிவகங்கை : தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மாவட்ட அளவில் கோயில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. சிவகங்கை கவுரி விநாயகர் கோயிலில் நேற்று காலை 9 மணிக்கு வெள்ளி அங்கியில் காட்சி அளித்த விநாயகருக்கு தாமரை பூ, அருகம்புல் மாலை அணிவித்து சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்து, பிரசாதம் பெற்று சென்றனர்.சிவகங்கை நாடார்பேட்டை பத்திரகாளியம்மன் கோயிலில் சித்திரை பொங்கல் விழா, நேற்று மாலை 6 மணிக்கு காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்தனர். பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

சிங்கம்புணரி: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிங்கம்புணரி சந்திவீரன் கூடத்தில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்று சேவுக பெருமாள் அய்யனார் கோயில் சென்றனர். சுவாமி, பிடாரி அம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது. பாரதிநகர் நொண்டிகருப்பர் கோயிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து சுந்தரம் நகர் சுகம் தரும் விநாயகர் கோயிலில் சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர். பதினெட்டுப்படி அய்யப்பன் கோயிலில் அய்யப்பன் காய், கனிகள், ரூபாய் நோட்டு அலங்காரத்தில் எழுந்தருளினார். சித்தர் முத்து வடுகநாதர் கோயில், செல்வவிநாயகர், பத்திரகாளியம்மன், சஞ்சீவி விநாயகர், சந்திவிநாயகர், குபேர கணபதி ஆகிய கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

திருப்புத்தூர்: திருத்தளிநாதர் கோயிலில் முருகனுக்கு பக்தர்கள் சித்திரை பால்குடம் எடுத்து நேர்த்தி செலுத்தினர். ஏப்ரல் 7ல் பக்தர்கள் முருகன் சன்னதியில் காப்புக் கட்டி விரதம் துவக்கினர். நேற்று காலை கோட்டை கருப்பண்ண சுவாமி கோயிலில் பக்தர்கள் கூடினர். சுவாமிக்கு சிறப்பு அபிஷேக,ஆராதனை நடந்தது. பின் பக்தர்கள் பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியே சென்று திருத்தளிநாதர் கோயில் வந்தடைந்தனர். முருகனுக்கு பால் அபிஷேகம் நடந்தது.

தாயமங்கலம்: முத்துமாரியம்மன் கோயிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு நடை திறந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. அம்மன் வெள்ளி அங்கி அணிந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பகல் 12 மணிக்கு அன்னதானம் நடந்தது. பரம்பரை டிரஸ்டி வெங்கடேசன் செட்டியார்,கோயில் ஊழியர்கள் ஏற்பாட்டை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !