கேரளா, குமரியில் சித்திரை விஷூ கொண்டாட்டம்!
நாகர்கோவில் : கேரளா மற்றும் குமரி மாவட்டத்தில் நேற்று சித்திரை விஷூ உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கோயில்களில் பக்தர்களுக்கு கைநீட்டம் வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் சித்திரை முதல் தேதி 14-ம் தேதி பிறந்தது. ஆனால் கேரளாவில் 15-ம் தேதிதான் சித்திரை பிறந்தது. இதனால் சித்திரை விஷூ நேற்று கொண்டாடப்பட்டது. குமரி மாவட்டத்தில் கேரள ஆசாரங்களை பின்பற்றும் சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயில் உள்ளிட்ட கோயில்களில் நேற்று விஷூ கனிதரிசனம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கனிதரிசனம் நடத்தினர். அவர்களுக்கு காய்-கனிகள் பிரசாதமாக வழங்கப்பட்டது. சபரிமலையில் நேற்று அதிகாலை ஐந்து மணிக்கு நடை திறந்ததும் கனி தரிசனம் நடைபெற்றது. தொடர்ந்து தந்திரி கண்டரரு ராஜீவரரு, மேல்சாந்தி கிருஷ்ணதாஸ் நம்பூதிரி ஆகியோர் பக்தர்களுக்கு நாணயங்களை கைநீட்டமாக வழங்கினர். விஷூ தினத்தையொட்டி நேற்று காலை பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 18-ம் படியேறவும், தரிசனத்துக்கும் நீண்ட கியூ காணப்பட்டது. இதுபோல குருவாயூர் கோயிலிலும் கனி காணும் நிகழ்ச்சியும், விஷூ பூஜைகளும் சிறப்பாக நடைபெற்றது.