ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் திருப்பணி: கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு!
திருச்சி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகளை, இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் தலைமை செயலாளர் கண்ணன், நேற்று பார்வையிட்டார். பிரசித்தி பெற்ற திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், 1,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. தமிழகம் மட்டுமின்றி, பல மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் இருந்தும் ஸ்ரீரங்கத்துக்கு, ஏராளமானோர் வருகின்றனர். ஸ்ரீரங்கம் கோவிலில் கடந்த, 2001 மார்ச், 15ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். அதனடிப்படையில், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், 10 கோடியே, 50 லட்ச ரூபாய் செலவில் திருப்பணிகள் செய்து, கும்பாபிஷேகம் நடத்தப்படும், என கடந்த, 2014 ஜூன், 5ம் தேதி அறிவித்தார். இதையடுத்து கடந்த, 2014 ஜூன், 26 ம் தேதி கும்பாபிஷேகத்துக்கான பாலாலய பணிகள் துவங்கியது. கடந்தாண்டு டிசம்பர் மாதமே பணிகள் முடிக்கப்பட்டு, கடந்த மார்ச் மாதம் கும்பாபிஷேகம் நடக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கும்பாபிஷேக பணிகள் துவக்கப்பட்டு, 10 மாதங்களாகியும் பணிகள் நிறைவு பெறவில்லை. இது குறித்து காலைக்கதிர் நாளிதழில் கடந்த, 24ம் தேதி செய்தி வெளியானது. இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் தலைமை செயலாளர் கண்ணன், ஸ்ரீரங்கம் கோவிலில், கும்பாபிஷேகத்துக்கான பல்வேறு திருப்பணிகளை பார்வையிட்டார். அப்போது, பணிகள் எப்போது முடியும், கும்பாபிஷேக தேதி எப்போது என நிருபர்கள் கேட்டனர். அதற்கு, "பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. எப்போது, பணிகள் முடிந்து, கும்பாபிஷேகம் நடக்கும், என்று எனக்கு எதுவும் தெரியாது” என்று கூடுதல் தலைமை செயலாளர் கண்ணன் தெரிவித்தார். கோவில் இணை ஆணையர் ஜெயராமன், சுற்றுலா துறை மாவட்ட அலுவலர் ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.