உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவசைலம் கோயிலில் கொடிமரம் பாலாலயம்

சிவசைலம் கோயிலில் கொடிமரம் பாலாலயம்

ஆழ்வார்குறிச்சி : சிவசைலம் கோயிலில் கொடிமரத்திற்கான பாலாலய பூஜைகள் இரு நாட்கள் நடந்தது. ஆழ்வார்குறிச்சிக்கு மேற்கே மேற்கு தொடர்ச்சி மலையின் கீழ் சிவசைலம் கிராமத்தில் மேற்கு நோக்கி சிவசைலநாதர் - பரமகல்யாணி அம்பாள் கோயில் உள்ளது. இங்கு கடந்த ஆண்டு ஜூலை 21ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. இக்கோயிலில் கடந்த சில நாட்களுக்கு முன் கொடிமரம் முறிந்து விழுந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலையில் தற்காலிகமாக சுமார் 26 அடி உயரத்தில் கோயிலுக்கு உள்ளாகவே நிற்கும் அளவிற்கு கொடிமரம் அமைக்கப்பட்டது. இக்கொடிமரம் அமைப்பதற்கான பாலாலய பூஜை இரு நாட்கள் நடந்தது. முதல்நாள் காலையில் கணபதி ஹோமம், வாஸ்து பூஜை, சுவாமி, அம்பாள் அபிஷேகம் நடந்தது. பின்னர் மாலையில் சுவாமி கொடிமரத்திலிருந்து கும்பத்திற்கு ஆவாகனம் செய்தல், பிரதோஷம் கழிந்த பின்னர் முதல் கால பூஜை, இரண்டாம் கால பூஜை நடந்தது. அதன் பின்னர் சுவாமியை புதிய கொடிமரத்திற்கு ஆவாகனம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.

பூஜைகளை பிள்ளையார்பட்டி கோயில் தலைமை பூசாரி பிச்சை குருக்கள், சிவசைலம் கோயில் அர்ச்சகர் நாரம்புநாதபட்டர், தூத்துக்குடி விக்னேஷ்பட்டர், வி.கே.புரம் சிவாபட்டர் நடத்தினர். இரண்டாம் நாள் அதிகாலையில் சிறப்பு பூஜைகள், கொடிமரம் பிரதிஷ்டை நடந்தது. சுமார் 26 அடி உயர கொடிமரத்தில் 5 அடி உயரம் பீடத்திற்கு உள்ளாகவும், 21 அடி உயரம் வெளியே தெரியுமளவிற்கும் அமைக்கப்பட்டுள்ளது. பாலாலய பூஜைகள் சென்னை சிம்சன் நிறுவன வைஸ் சேர்மன் கிருஷ்ணமூர்த்தி, பவானி கிருஷ்ணமூர்த்தி, என்.சிவசைலம், பவானி சிவசைலம், கோவை யக்ஞ சங்கரநாராயணகுமார், கோயில் ஆய்வாளர் சுப்புலட்சுமி, நிர்வாக அதிகாரி முருகன், சேதுராஜஐயர் மற்றும் கும்பாபிஷேக கமிட்டியினர், தெப்ப உற்சவ கமிட்டியினர், பங்குனி உற்சவ கமிட்டியினர் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் நடந்தது. தற்போது அமைக்கப்பட்டுள்ள கொடிமரம் தற்காலிகமாகவும் பின்னர் சுமார் 56 அடி உயரத்தில் புதிய கொடிமரத்தை அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !