பொம்மக்க ஸ்வாமி கோவில் கும்பாபிஷேக விழா
மேச்சேரி: மேச்சேரி அருகே பொம்மக்க ஸ்வாமி கோவில் மகா கும்பாபிஷேகம், நாளை நடக்கிறது. மேச்சேரி அடுத்த பானாபுரம் கிராமத்தில், பொம்மக்க ஸ்வாமி கோவில் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. கடந்த மாதம், 6ம் தேதி முகூர்த்த கால்கோள் விழாவுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. தொடர்ந்து, 29ல் மகா சங்கல்பம், புனிதநீரில் வருண பூஜை, காலை 10.30 மணியளவில் ஸ்வாமி திருவீதி உலா நடந்தது. மாலை 5 மணியளவில், பூமிதேவி வழிபாடு, சாஸ்திரிகளுக்கு திருகாப்பு அணிவிக்கப்பட்டது. 30ம் தேதி விசேஷ சந்தி, பூதசுத்தி கும்பஅலங்காரம், முதல்கால யாக பூஜை, மாலை 5 மணிக்கு தீபாராதனையும் நடந்தது. நேற்று, காலை 7.30 மணியளவில், இரண்டாம் கால யாகபூஜை, பகல் 1 மணிக்கு கோபுர கலசம் வைத்தல், மாலை 6 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜையும் செய்து வழிபாடு நடத்தப்பட்டது. இன்று காலை நான்காம் கால யாக பூஜை, மாலை 6 மணிக்கு ஐந்தாம் கால யாக பூஜை, இரவு 9 மணிக்கு மேல் பிம்பஸ்தாபனம், இன்னிசை கச்சேரியும் நடக்கிறது. நாளை காலை 6 மணியளவில், மங்கள இசையுடன் ஆறாம்கால யாக பூஜை செய்து கடம் புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது. காலை 9.50 மணிக்கு மேல் 10.15 மணிக்குள், மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை 11 மணியளவில், மஹா அபிஷேகம், தசதானம், தசதரிசனம், மஹா தீபாராதனை செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.