பாவங்களை போக்கும் பவளமலை கோமாதா பூஜையால் கோலாகலம்
கோபி : கோபி அடுத்த பவளமலை முத்துக்குமாரசாமி கோவிலில் நடந்த கோமாதா பூஜையில், நேற்று ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோபி அருகே, பவளமலை முத்துக்குமாரசாமி கோவில், மிகவும் பழமையான கோவிலாகும். இங்கு வாரந்தோறும் செவ்வாய் கிழமை காலை, 7 மணிக்கு கோமாத பூஜையும், தொடர்ந்து பால் அபிஷேகம், சத்ரு சம்ஹார திரிசதை அர்ச்சனையும் நடக்கிறது.முருகப்பெருமான் சூரனை வதம் செய்தபின், இந்திராதி தேவர்கள் கூடி, முருகனுக்கு செய்த அர்ச்சனையே, திரிசதை அர்ச்சனையாகும். ஆகவே, சத்ரு சம்ஹார திரிசதை அர்ச்சனை என அழைக்கப்படுகிறது. அதுபோன்று மாதந்தோறும் கிருத்திகை நட்சத்திரத்தில், சத்ரு சம்ஹார திரிசதை ஹோமம் நடக்கிறது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில், நேற்று காலை, 7 மணிக்கு, மூலவருக்கு அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து, அடிவாரத்தில் உள்ள கோசலையில் இருந்து, கோமாதவாக வழிபடும், இரு பசுக்கள் ஆகம விதிப்படி அழைத்து வரப்பட்டன. மூலவருக்கு பூஜை முடிந்தவுடன், கோமாதா பூஜை காலை, 7.30 மணிக்கு துவங்கியது. இரு பசுக்களின் கொம்புகளுக்கு இடையே, மஞ்சள் மற்றும் குங்குமம் வைத்து, பெண்கள் வழிபட்டனர்.அதையடுத்து, 7.45 மணிக்கு சத்ரு சம்ஹார திரிசதை அர்ச்சனை, 8.30 மணிக்கு மகா தீபாராதனை, 9 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.கோவில் குருக்கள் செல்வக்குமாரசிவம் மற்றும் விக்னேஷ் ஆகியோர் கூறியதாவது: இந்த பூஜைகளில் கலந்து கொண்டால், எதிரிகளின் தொல்லை நீங்கும். பயம் நீங்கும். திருமணத்தடை விலகும். வியாபாரம் மற்றும் தொழில் வளர்ச்சியடையும். தீமைகள் அகலும். கண் திருஷ்டி ஏற்படாது. பிள்ளைப்பேறு உண்டாகும். சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.இவ்வாறு அவர் கூறினார்.