ஸ்ரீவி.,ஆண்டாள் கோயில் மாடவீதி ரோடுகள் சேதம் எதிர்பார்ப்பில் பக்தர்கள்
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலை சுற்றி உள்ள மாடவீதிகளில் சேதமடைந்துள்ள ரோடுகளை வடபத்ரசாயி கும்பாபிஷேகத்திற்கு முன்பு சீரமைக்கவேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயிகோயில் கும்பாபிஷேகம் 22 ந்தேதி நடக்க உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் ஆண்டாள் மாட வீதிகள், கந்தாடைத் தெரு, சன்னிதி தெரு பகுதியிலுள்ள தெருக்களில் உள்ள சிமென்ட் ரோடுகள் சேதமடைந்துள்ளன. ஜல்லி கற்கள் பெயர்ந்து வருகின்றன. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். வடபத்ரசாயி கோயில் கும்பாபிஷேகத்திற்கு முன் இந்த ரோடுகள் சீரமைக்கவேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். இதை, கடந்த மாதம் நடந்த நகராட்சி கவுன்சில் கூட்டத்தில் அப்பகுதி வார்டு கவுன்சிலர் முனியப்பன் கோரினார். இருந்தபோதிலும் இன்று வரை அப்பகுதிகளில் எந்த பணியும் நடக்கவில்லை. ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி கமிஷனர் பழனிவேல் கஊறகையில்,"" வடபத்ரசாயி கோயில் கும்பாபிஷேகத்திற்கு முன்பு சேதமடைந்த ரோடுகள் சீரமைக்கப்படும். இதற்கான பணி விரைவில் துவங்கும்,என்றார்.