ஸ்ரீரங்கம் கோவில் தேருக்கு ரூ.8 லட்சத்தில் கண்ணாடி கூண்டு
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சித்திரை தேரை பக்தர்களும், வெளிநாட்டினரும் கண்டு ரசிக்கும் வகையில், கண்ணாடி கூண்டு அமைக்கப்பட்டு, அதனுள் தேர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள், நாட்டின் பல பகுதிகளில் இருந்தும், வெளிநாட்டிலிருந்தும் வருகின்றனர். ஸ்ரீரங்கம் கோவிலில், ஆண்டு தோறும் சித்திரை மாதம், தை மாதம், பங்குனி மாதங்களில் தேரோட்டம் நடக்கும். சித்திரை மாதத்தில் பவனி வரும் தேர், கிழக்கு சித்திரை வீதியில் தகர கொட்டகையில் வைத்து பூட்டப்பட்டிருந்தது. தற்போது, அனைவரும் இந்த தேரை ரசிக்கும் வகையில், கண்ணாடி கூண்டு அமைக்கப்பட்டு அதனுள் தேர் நிறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து ஸ்ரீரங்கம் கோவில் அதிகாரிகள் கூறியதாவது: ஸ்ரீரங்கம் கோவிலில், சித்திரை தேரோட்டம் வெகு பிரசித்தம். இந்த தேர் கிழக்கு சித்திரை வீதியில், தகர கொட்டகையில் நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது, எட்டு லட்சம் ரூபாய் மதிப்பில், புதிதாக கண்ணாடி கூண்டு தயார் செய்யப்பட்டு, தேர் இந்த கூண்டுக்குள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பக்தர்களும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இதை ஆர்வமுடன் பார்த்துச் செல்கின்றனர். பாதுகாப்பதும் எளிதாக இருக்கிறது. ஏற்கனவே, பங்குனி தேருக்கும், இதே போல் கண்ணாடி கூண்டு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.