உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்சி சமயபுரம் கோவிலில் ரூ.59 லட்சம் காணிக்கை

திருச்சி சமயபுரம் கோவிலில் ரூ.59 லட்சம் காணிக்கை

திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணப்பட்டது. இதில், 59 லட்சம் ரொக்கமும், ஒன்றரை கிலோ தங்கமும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கடந்த, 15ம் தேதி பஞ்சபிரகார விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து கோவிலில் உள்ள, 22 உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது. கோவில் இணை கமிஷனர் தென்னரசு தலைமையில், மண்ணச்சநல்லூர் சிதம்பரம் பிள்ளை மகளிர் கல்லூரி மாணவியர், கொனலை இந்திரா செவிலியர் மகளிர் கல்லூரி மாணவியர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். உண்டியலில், 59 லட்சத்து, 56 ஆயிரத்து, 456 ரூபாய் ரொக்கம் இருந்தது. தங்கம், 1,678 கிராமும், வெள்ளி, 5,836 கிராமும் இருந்தது. வெளிநாட்டு கரன்சிகள், 62 இருந்தது. இதற்கு முன் சித்திரை திருவிழா முடிந்து கடந்த, 7ம் தேதி உண்டியல் திறக்கப்பட்ட போது, 70 லட்சம் ரூபாய் ரொக்கம் இருந்தது. உண்டியல் எண்ணும் பணியை திருச்சி உதவி கமிஷனர்கள் ஜெயப்பிரியா, முல்லை, கோவில் முதுநிலை கணக்கு அலுவலர் மாலதி, மேலாளர் மணிவண்ணன், மண்ணச்சநல்லூர் இந்து அறநிலையத்துறை ஆய்வாளர் சேதுராமன் ஆகியோர் பார்வையிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !