மணக்குள விநாயகர் கோவிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா
புதுச்சேரி: மணக்குள விநாயகர் கோவில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா இன்று (28ம் தேதி) துவங்குகிறது. புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா முடிந்து, 48 நாட்களுக்கு மண்டல அபிஷேகங்கள் நடந்து வருகிறது. நாளை 29ம் தேதி மண்டலாபிஷேக நிறைவு விழா நடக்கிறது. இதையொட்டி, இன்று 28ம் தேதி மாலை 6:30 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, பஞ்சகவ்ய பூஜை, மணக்குள விநாயகர் மற்றும் பரிவாரங்கள் வேதிகை பூஜை, விசேஷ திரவிய ஹோமமும் நடக்கிறது. நாளை 29ம் தேதி காலை 6:30 மணிக்கு, யாக பூஜை ஹோமம், காலை 9:00 மணிக்கு விசேஷ திரவிய ஹோமம், காலை 11:00 மணிக்கு, 108 கலச அபிஷேகமும், காலை 12:00 மணிக்கு மூலவர் தீபாராதனையும் நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு உற்சவ மூர்த்தி வீதியுலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி கருணாகரன், அறங்காவல் குழுத்தலைவர் ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் செய்துள்ளனர்.