எமனேஸ்வரத்தில் வைகாசி திருவிழா:நாளை தேரோட்டம்!
பரமக்குடி:பரமக்குடி வைகை ஆற்றின் மறு கரையில் உள்ள, எமனேஸ்வரம் வரத ராஜப் பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோத்சவ விழா, கடந்த மே 22 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.தொடர்ந்து பெருமாள் தினமும் காலை, மாலையில் அன்னம், சிம்மம், சேஷ, கருட, அனுமன், யானை, குதிரை வாகனங்களில் வீதியுலா வந்தார். நேற்று காலை திருக்கல்யாணம் நடந்தது. மே 30 ல் தேரோட்டமும், மே 31ல் கொடியிறக்கமும் நடைபெறுகிறது.
இதைத்தொடர்ந்து வைகாசி பவுர்ணமி வசந்தோற்சவ விழா துவங்குகிறது. அதையொட்டி, ஜூன் 1 ல் காலை 9.30 க்கு கும்ப திருமஞ்சனமும், மறுநாள் அதிகாலை 3 மணிக்கு மேல் பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்துடன், புஷ்ப பல்லக்கில் வைகை ஆற்றில் காட்சியளிக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது
மறுநாள் காலை 10.35 க்கு பெருமாள் குதிரை வாகனத்தில் அலங்காரமாகி, மதியம் 3 மணிக்கு ஆயிரம் பொன் சப்பரத்தில் அருள்பாலித்து, இரவு வண்டியூரை அடைகிறார். ஜூன் 3 ல் சேஷ வாகனத்தில் மாணிக்கா மண்டகப் படியில், மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து பெருமாள் கருட, அனுமன் வாகனங்களில் எழுந்தருளி, ஜூன் 7 ல் காலை 9 மணிக்கு கோயிலை அடைகிறார். ஏற்பாடுகளை எமனேஸ்வரம் சவுராஷ்ட்ர சபை தலைவர் ஹரிதாஸ் தலைமையிலான நிர்வாக குழுவினர் செய்து வருகின்றனர்.