பவளமலை முருகனுக்கு வைகாசி விசாகம் பூஜை
கோபி: கோபி பவளமலை முருகன் கோவிலில், வைகாசி விசாக பூஜை நேற்று கோலாகலமாக நடந்தது. வைகாசி மாதத்தில் சந்திரன், பவுர்ணமி நாளில் விசாக நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும். அதனாலேயே, இந்த மாதம், "வைசாக மாதம் என்றிருந்து, பின்னாளில் "வைகாசி என்றானது. இந்த மாத பவுர்ணமி நாளையே, வைகாசி விசாகம் என அழைக்கிறோம். இந்நாளில் முருகப்பெருமான் அவதாரம் செய்ததாலேயே, முருகனின் பிறந்த நாளையே வைகாசி விசாகமாக கொண்டாடுகிறது. அதன்படி, கோபி பவளமலை முத்துக்குமாரசாமி ஸ்வாமி கோவிலில், வைகாசி விசாகம், நேற்று கோலாகலமாக நடந்தது. காலை, 9 மணிக்கு மூலவர் மற்றும் வள்ளி தேவசேனா உடனமர் சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 10 மணிக்கு சண்முகருக்கு திருக்கல்யாண உற்சவம், 11 மணிக்கு சத்துரு சம்ஹார திரிசதை அர்ச்சனை நடந்தது. பகல், 12 மணிக்கு மகா தீபாராதனை, அதைதொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.