ராஜகணபதி கோவில் பகுதியில் பழுதான 2 தேர்கள்... இடமாற்றம்?
சேலம்: சேலம், ராஜகணபதி கோவில் அருகே, பழுதான இரண்டு தேர்களையும் அப்புறப்படுத்தி, அப்பகுதியில் உள்ள போக்குவரத்து நெரிசலை குறைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சேலம் மாநகரில், அக்ரஹாரம் பகுதியில் உள்ள ராஜகணபதி கோவிலின் அருகில், சுகவனேஸ்வரர், பெருமாள் கோவிலின் தேர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில், ரோட்டோர கடை, போலீஸ் பூத், வணிக நிறுவனங்கள் ஆக்கிரமிப்பு உள்ளதால், அந்தபகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், சேலம் மாநகராட்சி கமிஷனராக இருந்த ஜெயராமன், இரண்டு தேர்களையும், சுகவனேஸ்வரர் கோவில் நந்தவனத்தில் வைத்து பராமரிக்க தேவையான நடவடிக்கை மேற்கொண்டார். தேரை இடமாற்றம் செய்வதற்கான பணிகள் துரிதகதியில் நடந்த நிலையில், அவர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டார். அதன்பின் மாநகராட்சி, போலீஸ் கமிஷனர் பொறுப்புக்களை வகித்த அதிகாரிகள் யாரும், கடைவீதி போக்குவரத்து நெரிசலை கண்டு கொள்ளாததால், பொதுமக்கள் தினந்தோறும் அவதியை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது சுகவனேஸ்வரர் மற்றும் பெருமாள் கோவில் தேர்கள் பழுதான நிலையில் உள்ளதால், முடக்கப்பட்டது. சுகவனேஸ்வர் கோவில் தேரை புதுப்பிக்க, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், அப்பணிகள் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தும், இரண்டு தேர்களும், அடுத்த ஆண்டு தேரோட்டத்தில் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதால், மறுசீரமைப்பு பணிக்காக, இரண்டு தேர்களையும், கோவில்களுக்கு சொந்தமான இடங்களுக்கு மாற்றம் செய்ய கோரிக்கை எழுந்துள்ளது. மேலும், "தேர் நிறுத்தத்தை ஒட்டியுள்ள பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இப்பிரச்னையில், மாநகராட்சி கமிஷனர், போலீஸ் கமிஷனர், ஹிந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை கமிஷனர் ஆகியோர் இணைந்து, ராஜகணபதி கோவிலின் அருகே உள்ள பழுதடைந்த இரண்டு தேரை வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.