காரமடை அரங்கநாதர் கோவிலில் 12 டன் எடையில் அமைந்த அழகிய கதவு!
கோவை மாவட்டம், காரமடையில் உள்ள வைணவத்தலமான, அரங்கநாத பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம், ஜூன் 7ல் நடைபெற உள்ளது. அதையொட்டிய தொடர் கட்டுரையின் 13ம் பகுதி இங்கே.... ஸ்ரீதேவி, பூதேவி சமேத காரமடை அரங்கநாத பெருமாள் கோவிலில், புதிதாக ஏழுநிலை ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு, அழகான வைணவ தத்துவம் ஒருங்கே அமைந்த, 12 டன் எடையுள்ள ஒரே மரத்திலான கதவு, மிகவும் சிறப்பாக அமையப் பெற்றுள்ளது. கதவில், 11 வரிசைகள் உள்ளன. ஒரு வரிசைக்கு மூன்று சிலைகள் என, இரு கதவிலும் சேர்த்து மொத்தம், 66 சிலைகள் செதுக்கி, கட்டத்தில் வைக்கப்பட்டுள்ளன.
முதல் வரிசையில் (மேலிருந்து கீழ்) பெருமாளின் சங்கு, சக்கரம், திருமண் செதுக்கி வைக்கப்பட்டுள்ளன. இரண்டாம் வரிசையில், வைணவ தலைமை திவ்ய தேசங்களின் பெருமாள், ஸ்ரீரங்கம், அலர்மேல் சமேத திருமலை திருப்பதி பெருமாள், காஞ்சிபுரம் வரதராஜர், திருநாராயணபுரம் செலுவ நாராயண பெருமாள் சிலைகள் உள்ளன.
மூன்று மற்றும் நான்காம் வரிசையில், பெருமாளின் பத்து அவதாரங்களான மத்ஸம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனம், பரசுராமன், ராமன், பலராமன், கிருஷ்ணர், கல்கி சிலைகள் உள்ளன. கதவில் வைத்துள்ள, 108 குமிழ்கள், 108 திவ்ய தேசங்களாக காட்சி அளிக்கின்றன. அனைத்து வைணவ லட்சணங்களும் அமையப் பெற்ற மிகப்பெரிய கதவு காண அற்புதமாக உள்ளது. கதவையும், அதில் உள்ள சிற்பங்களையும், கேரளாவை பூர்வீகமாக கொண்ட, தற்போது காரமடையில் வசிக்கும், ஸ்தபதி ராதாகிருஷ்ணன், அவரது குழுவினர் செய்துள்ளனர்.
ஸ்தபதி ராதாகிருஷ்ணன் கூறுகையில், ‘‘அரங்கநாதர் கோவில் ராஜகோபுர வாசலுக்கு, பர்மா தேக்கில் கதவுகள் செய்யப்பட்டுள்ளன. 12 டன் எடையுள்ள கதவிற்கு, ஒரே மரம் கிடைத்தது, கடவுளின் அருளால் நிகழ்ந்த அதிசயமாகும். இரவு பகலாக, 30 ஸ்தபதிகள், 90 நாட்கள் விரதம் இருந்து, பயபக்தியுடன் கதவு செய்து முடித்துள்ளனர்,’’ என்றார். இந்த கதவின் உபயதாரர் எம்.எம்.ராமசாமி, ஜெயலட்சுமி, ‘கதவுக்கு தேவையான ஒரே மரம் கிடைத்தது, காரமடை அரங்கநாதரின் மகிமை’ என்றனர்.