உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆன்ம ஞானம் ஏன் அவசியம்?

ஆன்ம ஞானம் ஏன் அவசியம்?

3:2 இறையனுபூதி

சாதாரண அறிவு உலக இன்பதுன்பங்களில் ஆழ்த்தி மீண்டும் மீண்டும் பிறவிக்கே வழிவகுக்கும். உயர் அறிவு இறை நெறியைக் காட்டும் இறைவனைத் தரும் (1:1). எனவே சாதாரண அறிவை விட்டு உயர் அறிவை நாட வேண்டும். உலகை விட்டு இறைவனை நாட வேண்டும். இதுவே துறவு. இதற்கு தவம். நல்லொழுக்கம், ஆராய்ச்சி, பற்றின்மை, தெளிவான நோக்கம், குருவை நாடுதல் ஆகியவை முதற்படிகள் (1:2)

நாம் தெய்வீகமானவர்கள் என்று ஆழ்ந்து சிந்திப்பது பற்றி 2:1 -லும், இறையனுபூதிக்கு ஆன்ம அனுபூதி அவசியம் என்பதுபற்றி 2:2 லும் கண்டோம்.

இந்த இறுதி அத்தியாயத்தில் இறையனுபூதி என்னும் இறுதி நிலைபற்றி காண்கிறோம்.

முதற்படி: ஆன்ம ஞானம்

எங்கும் நிறைந்த இறைவனே நம்மில் ஆன்மாவாக விளங்குகிறார் என்று ஏற்கனவே (2:2.7) கண்டோம். அந்த ஆன்ம தரிசனம் முதற்படி, இதன்மூலம் ஒருவன் தன்னை உடம்பிற்கு அப்பாற்பட்டவனாக, மனத்திற்கு அப்பாற்பட்டவனாக. ஓர் ஒளிப்பொருளாக உணர்கிறான். இவனே இறைவனைத் தேடத் தக்கவன். அனுபூதியில் அறியத் தக்கவன். அவரை அடையத் தக்கவன்.

ஸ வேதைதத் பரமம் ப்ரஹ்ம தாம
யத்ர விச்வம் நிஹிதம் பாதி சுப்ரம்/
உபாஸதே புருஷம் யே ஹ்யகாமா-
ஸ்தே சுக்ரமேதத் அதிவர்த்தந்தி தீரா:// 1//

யத்ர - எங்கே; விச்வம் - பிரபஞ்சம்; நிஹிதம் - நிலை பெற்றுள்ளதோ; சுப்ரம் - புனித ஒளியுடன்; பாதி - பிரகாசிக்கின்ற; ஏதத் - இந்த; பரமம் - மேலான; தாம - இருப்பிடமான; ப்ரஹ்ம- இறைவனை; ஸ-அவன்; வேத - அறிகிறான்;
யே-யார்; தீரா- விழிப்புணர்வு பெற்ற; அகாமா:- ஆசையற்றவர்கள்; புருஷம் - இறைவனை; உபாஸதே - வழிபடுகிறார்கள்; தே - அவர்கள்; ஏதத் - இந்த; சுக்ரம் - பிறவிக்கான விதையை; அதிவர்த்தந்தி - கடக்கிறார்கள்.

1. யாரிடம் பிரபஞ்சம் நிலைபெற்றுள்ளதோ,
மேலான இருப்பிடமும், புனித ஒளியுடன் பிரகாசிப்
பவருமான அந்த இறைவனை ஆன்ம ஞானிகள் அறி
கின்றனர். ஆசையற்ற, விழிப்புணர்வு பெற்ற
அவர்கள் அவரை வழிபட்டு, பிறவிகளற்ற நிலையை
அடைகிறார்கள்.

ஆன்ம ஞானம் ஏன் அவசியம்?

இறைவனை நாடுபவனுக்கு வேறு ஆசைகள் கூடாது. ஆனால் ஆசைகளை விடுவது அவ்வளவு சுலபம் அல்ல. ஒவ்வோர் ஆசைகளாக விடுவது சாத்தியமும் அல்ல, இங்கே ஆன்ம தரிசனம் ஆசைகளை ஒழிப்பதாக கூறப்படுகிறது. ஆன்ம உணர்வு பெற்றவன். தன்னை ஆன்மாவாக உணர்ந்தவனின் மற்ற ஆசைகள் அனைத்தும் விலகிவிடுகின்றன. அவன் இறைவனை நாடுவதற்குத் தகுதி பெறுகிறான்.

காமான்ய: காமயதே மன்யமான:
ஸ காமபிர்ஜாயதே தத்ர தத்ர/
பர்யாப்த காமஸ்ய க்ருதாத்மனஸ்து
இஹைவ ஸர்வே பரவிலீயந்தி காமா: //2//

ய: - யார்: காமான் - ஆசைகளை: காமயதே -  நாடுகிறானோ: மன்யமான: - சிந்திப்பவன்: ஸ: - அவன்: காமபி: - ஆசைகள் காரணமாக: தத்ர தத்ர - இங்கும் அங்கும் ஜாயதே - பிறக்கிறான்: பர்யாப்த காமஸ்ய - ஆசைகள் நிறைவேறப்பெற்ற: க்ருதாத்மன: து - ஆன்ம ஞானிக்கோ: ஸர்வே - எல்லா: காமா: - ஆசைகளும்: இஹ ஏவ - இங்கேயே ப்ரவிலீயந்தி - ஒடுங்குகின்றன.

2. யார் ஆசைவசப்பட்டு, ஆசைக்குரிய பொருட்
களைப்பற்றி சிந்திக்கிறானோ அவன் அந்த ஆசை
களை நிறைவேற்றிக் கொள்வதற்காக இங்கும்
அங்கும் பிறக்கிறான். ஆசைகள் நிறைவேறப் பெற்ற
ஆன்ம ஞானிக்கோ எல்லா ஆசைகளும் இங்கேயே
ஒடுங்கிவிடுகின்றன.

ஆன்ம ஞானத்திற்கான நிபந்தனைகள் (3-4)

இறையனுபூதிக்கு முதற்படி ஆன்ம ஞானம். அதைப் பெறுவதற்கான சில நிபந்தனைகளை 3-4 மந்திரங்கள் கூறுகின்றன.

மன ஏக்கம்

நாயமாத்மா ப்ரவசனேன லப்யோ
ந மேதயா ந பஹுனா ச்ருதேன/
யமேவைஷ வ்ருணுதே தேன லப்ய-
ஸ்தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தனும் ஸ்வாம் //3//

அயம்- இந்த; ஆத்மா- ஆன்மா; ப்ரவசனேன -  சொற்பொழிவுகளால்; ந லப்ய: - அடையப்படுவதில்லை; ந மேதயா - புலமையால் அல்ல; பஹுனா ச்ருதேன -எவ்வளவோ கேட்பதாலும் அல்ல; யம் ஏவ ஏஷ - யார் அதற்காகவே; வ்ருணுதே - மன ஏக்கம் கொள்கிறானோ; தேன - அவனால்; லப்ய: - அடையப்ப்டுகிறது; தஸ்ய - அவனுக்கு: ஸ்வாம் - தனது: தனூம் - சொந்த இயல்பை: விவ்ருணுதே - வெளிப்படுத்துகிறது.

3. சொற்பொழிவுகளாலோ, புலமையாலோ,
பலவற்றைக் கேட்பதாலோ இந்த ஆன்மாவை
அடைய இயலாது, யார் அதை அடைவதற்காக மன
ஏக்கம் கொள்கிறானோ அவன் மட்டுமே அதனை
அடைகிறான். அந்த ஆன்மா அவனுக்குத் தனது
சொந்த இயல்பை வெளிப்படுத்துகிறது.

மன ஏக்கம் என்பதை ஸ்ரீராமகிருஷ்ணர் ஓர் ஆன்மீக சாதனையாகக் கூறுவதுடன், இறைக் காட்சிக்கு முந்தின நிலையாகவும் வைக்கிறார்: ஆழ்ந்த மன ஏக்கத்துடன் அழுதால் அவரைக் காண முடியும்.... மன ஏக்கம் வந்து விட்டாலே அருணோதயம் ஆகிவிட்டது. அதன்பிறகு கதிரவன் தன்னைக் காட்டியருள்வான். அதுபோல் மன ஏக்கத்திற்குப் பிறகு இறைக்காட்சி வருகிறது.

தீவிரமான தேவை ஏற்படும்போதுதான் மன ஏக்கம் வருகிறது. உள்ளார்ந்த ஏக்கமின்றி, சொற்பொழிவுகளைச் செய்வதாலோ கேட்பதாலோ நூல்களைப் படிப்பதாலோ ஆன்மீகத்தில் எதையும் அடைய இயலாது, உயர் உண்மையை அடைய வேண்டும். இறைவனைக் காண வேண்டும் என்பதெல்லாம் உணவு, உடை போன்ற நமது அன்றாடத் தேவைகளுள் ஒன்றாக வேண்டும். அப்போது மட்டுமே அதற்காக நாம் ஏக்கம் கொள்வோம். ஏக்கம் கொள்ளும்போதுதான் வழி பிறக்கும். உண்மை தெரியும்.

வலிமை

நாயமாத்மா பலஹீனேன லப்யோ
ந ச ப்ரமாதாத் தபஸோ வாஸப்யலிங்காத்/
ஏதைருபாயைர்யததே யஸ்து வித்வாம்-
ஸ்தஸ்யைஷ ஆத்மா விசதே ப்ரஹ்மதாம //4//

அயம் - இந்த; ஆத்மா - ஆன்மா: பலஹீனேன - வலிமையற்றவனால்; ந லப்ய: - அடையப்படுவதில்லை; ப்ரமாதாத் - கவனமின்மையால்; அலிங்காத் - சின்னங்கள் இல்லாத: தபஸ: - தவங்களால்; வா அபி ந - அடையப்படுவதில்லை; ய:து - எந்த: வித்வான் - மகான்; ஏதை: - இந்த: உபாயை: - வழிகளால்: யததே - முயற்சிக்கிறானோ, தஸ்ய - அவனுக்கு: ஏஷ: - இந்த: ஆத்மா - ஆன்மா: ப்ரஹ்ம தாம - இறைவனின் இருப்பிடம்: விசதே - அடைகிறான்.

4. இந்த ஆன்மா வலிமையற்றவனால் அடையப்
படுவதில்லை கவனமின்மையாலோ, சின்னங்கள்
இல்லாத தவங்களாலோ அடையப்படுவதில்லை
எந்த மகான் (மன ஏக்கத்துடனும், உடல் மற்றும் மன
வலிமைகளால் பிறந்த உறுதியுடனும்) முயற்சிக்
கிறானோ அவன் இறைவனின் இருப்பிடமான இந்த
ஆன்மாவை அடைகிறான்.

இங்கே மூன்று கருத்துக்கள் கூறப்படுகின்றன.

1. ஆன்மா வலிமையற்றவனால் அடையப்படுவதில்லை. உடல் வலிமை, மன வலிமை இரண்டும் இங்கே கருத்தில் கொள்ளப்படுகின்றன. சுவாமி விவேகானந்தர் விளக்குகிறார்.

வலிமையான, தீரம் மிக்கவர்களே இதற்கேற்ற மாணவர்கள். பலமற்ற நோஞ்சான்களால் என்ன சாதிக்க முடியும்? யோகங்களில் ஏதேனும் ஒன்றைப் பயிலும்போது, உடலிலும், உள்ளத்திலும் மறைந்து கிடக்கும் ஆற்றல் சிறிது விழித்தெழுந்தால் போதும். அதைத் தாங்க முடியாமல் இவர்கள் சிதறிப் போவார்கள். இளமையும் ஆரோக்கியமும் வலிமையும் ( ஆசிஷ்ட்டோ த்ருடிஷ்ட்டோ பலிஷ்ட்ட: தைத்திரீய உபநிஷதம், 2:8.1.)உடையவர்களே வெற்றி பெற முடியும். எனவே உடல் வலிமை மிகவும் இன்றியமையாதது. பொறிகளை அடக்கி ஆளும்போது ஏற்படக்கூடிய அதிர்ச்சிகளை ஆற்றல் படைத்த உடம்புகளினால் மட்டுமே தாங்க முடியும்.

மன வலிமை அற்றவர்களாலும் ஆன்மாவை அடைய முடியாது...... உற்சாகமாக இருக்க வேண்டும். உற்சாகமானவர்களே முயற்சி உடையவர்கள். உறுதியான உள்ளம் படைத்தவர்களே ஆயிரக்கணக்கான துன்பங்கள் முளைத்தாலும் அவற்றை வெட்டிச் சாய்த்து முன்னேறுபவர்கள். மிகமிகக் கடினமான இந்தக் காரியம். மாயையின் வலையிலிருந்து வெளியேறும் இந்தச் செயல், அபாரமான மன உறுதி கொண்டவர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்ட பணியாகும்.

உடம்பிலும் மனத்திலும் வலிமை இல்லாமல் போனால் ஆன்மாவை அடைய முடியாது. நல்ல சத்தான உணவைச் சாப்பிட்டு முதலில் உடம்பை வலிமைப்படுத்த வேண்டும். அதன் பிறகே மனம் வலிமை பெறும். மனம் என்பது உடம்பின் நுட்பமான பகுதிதான். மனத்திலும் வாக்கிலும் மகத்தான வலிமையை ஏற்றிக்கொள்.

உங்கள் உடம்பை நினைத்து அது நலமாக; உறுதியாக இருப்பதாக எண்ணுங்கள் உடல்தான் நம்மிடம் உள்ள சிறந்த கருவி. அது வஜ்ரம்போல் உறுதியாக இருப்பதாகவும், அதன் துணையுடன் நீங்கள் வாழ்க்கைக் கடலையே தாண்டி விடலாம் என்றும்  எண்ணுங்கள். முத்தி என்பது பலவீனர்களுக்குக் கிடையாது. எல்லா பலவீனத்தையும் தூக்கி எறியுங்கள். உங்கள் உடம்பு உறுதியாக இருப்பதாக அதனிடம் சொல்லுங்கள். உங்கள் மனம் உறுதியாக இருப்பதாக அதனிடம் சொல்லுங்கள். உங்களிடமே எல்லையில்லா நம்பிக்கை. முழு நம்பிக்கை வையுங்கள்.

2. கவனமின்மை: கவனமின்மையால் ஆன்மீக வாழ்க்கையை என்றல்ல, வாழ்க்கையையே இழந்தோர் பலர். எனவே ஒவ்வொரு படியிலும் கவனமும் எச்சரிக்கையும் தேவை. படிகளின் உச்சியில் நிற்கின்ற ஒருவன் ஒரு கணம் கவனத்தைச் சிதறவிட்டதால் கையிலிருந்து தவறி வீழ்ந்த பந்தினைக் காட்டி இதனை விளக்குகிறார். ஸ்ரீசங்கரர்.
(ப்ரச்யுத கேலிகந்துக; ஸோபான பங்க்தௌ பதிதோ யதா ததா - விவேக சூடாமணி, 325.)கையிலிருந்த வீழ்ந்த பந்து அங்கேயே கிடப்பதில்லை. வீழ்ந்த வேகத்தைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு படிகள்தோறும் உருண்டு, படிப்படியாக வீழ்ந்து எங்கேயோ கண்ணுக்கெட்டா தொலைவில் போய்விடுகிறது. வாழ்க்கையில் தவறான அடி எடுத்து வைக்கும்போது, அது பெரிதாகத் தெரிவதில்லை. ஒருவேளை, மனம் ஒரு சமிக்ஞை தரும். ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் விட்டு விடுவோம். கடைசியில், மீள முடியாத அளவிற்குத் தவறுகளில் புதையுண்ட பிறகே புரிந்து கொள்வோம். எனவே கவனமின்மைக்கு ஒருபோதும் இடம் தரலாகாது.

3. சின்னங்கள் இல்லாத தவம்: சின்னங்கள் இல்லாத தவங்களால் ஆன்மா அடையப்படுவதில்லை. என்று உறுதியான மொழியில் உபநிஷதம் கூறுவதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். திருநீறு, திருமண்,குங்குமம், சந்தனம், ருத்ராட்சமாலை, போன்றவை மட்டுமல்ல; விரதங்கள், சடங்குகள் போன்ற அனைத்தும் இன்றியமையாதவை. சின்னங்கள் எப்போதும் நமக்கு நமது லட்சியத்தை நினைவூட்ட வல்லவை. ருத்ராட்சமும் திருநீறும் அணிந்துள்ள நான் இப்படியொரு தீய சிந்தனைக்கு மனத்தில் இடம் தரலாமா? என்ற கேள்வி எழும்போது, அது நாம் தவறான அடி எடுத்து வைப்பதிலிருந்து நம்மைப் பேரளவிற்குக் காக்கிறது. கணந்தோறும் கவனமாக இருப்பதில் சின்னங்கள் இவ்வாறு துணை செய்கின்றன.

ஆன்ம ஞானி இறைவனை அடைகிறான்: 5-6

ஆன்மீக வாழ்வின் முக்கிய இறுதிப் படிகளில் ஒன்று இங்கே கூறப்படுகிறது. முதலில் புத்தியின் விழிப்பு, தொடர்ந்து ஆன்ம தரிசனம், மூன்றாவதாக இறைக்காட்சி, தொடரும் இரண்டு மந்திரங்கள் அதுபற்றி கூறுகின்றன.

ஸம்ப்ராப்யைனம் ரிஷயோ ஜ்ஞானத்ருப்தா:
க்ருதாத்மானோ வீதராகா: ப்ரசாந்தா:
தே ஸர்வகம் ஸர்வத: ப்ராப்ய தீரா
யுக்தாத்மான: ஸர்வமேவாவிசந்தி //5//

ரிஷய: - முனிவர்கள்: ஏனம் - இந்த ஆன்ம ஞானத்தை: ஸம்ப்ராப்ய - அடைந்து: ஜ்ஞான த்ருப்தா: - ஆன்ம ஞானத்தில் திருப்தி பெற்றவர்களாக: க்ருதாத்மான; - ஆன்மாவில் நிலைபெற்றவர்களாக; வீதராகா: - விருப்பு வெறுப்பு அற்றவர்களாக; ப்ரசாந்தா: - அமைதியில் நிலைபெற்றவர்களாக: தே - அவர்கள்: தீரா: - விழிப்புணர்வு பெற்றவர்கள்: யுக்தாத்மான: - தியானத்தில் நிலைபெற்றவர்கள்: ஸர்வகம் - எங்கும் நிறைந்த: ஸர்வத - எல்லாமான: ப்ராப்ய - அடைந்து ஸர்வம் ஏவ - எல்லாம் ஆனதிலேயே; ஆவிசந்தி - புகுகிறார்கள்.

5. இந்த ஆன்ம ஞானத்தைப் பெற்ற முனிவர்கள்
ஆன்ம ஞானத்தில் திருப்தி பெற்றவர்களாக, ஆன்மா
வில் நிலைபெற்றவர்களாக, விருப்பு வெறுப்பு
அற்றவர்களாக, அமைதியில் நிலைபெற்றவர்களாக
ஆகிறார்கள். விழிப்புணர்வு பெற்ற, தியானத்தில்
நிலைபெற்ற அவர்கள் எங்கும் நிறைந்த, எல்லாமான
இறைவனை அடைந்து அவரிலேயே நிலைபெறுகிறார்கள்.

வேதாந்த விஜ்ஞான ஸுநிச்சிதார்த்தா:
ஸன்யாஸ யோகாத் யதய: சுத்தஸத்வா:/
தே ப்ரஹ்மலோகேஷு பராந்தகாலே
பராம்ருதா: பரிமுச்யந்தி ஸர்வே //6//

வேதாந்த விஜ்ஞான - வேதாந்தத்தின் உண்மைப் பொருளை; ஸுநிச்சிதார்த்தா: - நன்றாக அறிந்தவர்கள்; ஸன்யாஸ யோகாத் - துறவு வாழ்க்கையால் : சுத்த ஸத்வா: - மனத் தூய்மை பெற்றவர்கள்; யதய - புலக் கட்டுப்பாடு உடையவர்கள் : தே - அவர்கள்: ஸர்வே - எல்லோரும்: பராம்ருதா: - மரணமற்ற நிலையை அடைந்து: பராந்தகாலே - உடல் வீழந்தபிறகு; பரிமுச்யந்தி - முற்றிலுமாக விடுபட்டு; ப்ரஹ்ம லோகேஷு - இறைநிலையில்.

6. வேதாந்தத்தின் உண்மைப் பொருளை நன்றாக
அறிந்த, துறவு வாழ்க்கையால் மனம் தூய்மை
பெற்ற, புலன்களை வசப்படுத்திய அனைவரும்
மரணமற்ற நிலையை அடைகிறார்கள். உடல் வீழ்ந்த
பிறகு முற்றிலுமாக விடுபட்டு இறைநிலையை
அடைகிறார்கள்.

மரணமற்ற பெருநிலையை அடைவதற்கு இங்கே மூன்று நிபந்தனைகள் கூறப்படுகின்றன-

1. வேதாந்தத்தின் உண்மைப் பொருளை நன்றாக அறிந்திருத்தல்: தத் த்வம் அஸி என்பது வேதாந்தத்தின் மகாவாக்கியங்களுள் ஒன்று.(நான்கு வேதங்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு சொற்றொடர்கள் மகா வாக்கியங்கள் என்று குறிப்பிடப்படுகின்றன. மிகவும் புனிதமானவையாகக் கருதப்படுகின்ற இவை நமக்கும் இறைவனுக்கும் உள்ள அறுதிநிலைத் தொடர்பை விளக்குபவையாக உள்ளன.
1. ப்ரஜ்ஞானம் ப்ரஹ்ம  (பிரம்மம் பேருணர்வுப்பொருள்) - ரிக்வேதம்.
2. அஹம் ப்ரஹ்மாஸ்மி ( நான் பிரம்மமாக இருக்கிறேன் ) - யஜுர்வேதம்
3. தத் த்வம் அஸி ( அது நீ ஆகிறாய்) - சாம வேதம்
4. அயமாத்மா ப்ரஹ்ம ( இந்த ஆன்மா பிரம்மம்) - அதர்வண வேதம்.)
 அது நீ ஆகிறாய் என்பது இதன்பொருள். உடம்பையும் மனத்தையும் கடந்த ஆன்மாவே மனிதன். உடம்பும் மனமும் மாறுபவை. அழியக் கூடியவை. ஆன்மா அழியாதது. அதுவே உண்மை மனிதன். அனுபூதியில் இந்த உண்மை அறிந்திருக்கப்பட்ட வேண்டும்.

2. துறவு வாழ்க்கையால் மனம் தூய்மை பெற்றிருத்தல்: தூய மனம் வேண்டும் , தூய மனம் என்றால் ஆசைகள் அற்ற மனம். அது துறவினால், அதாவது தியாகத்தால் அடையப்படுகிறது.

3. புலன் கட்டுப்பட்டிருத்தல்: புலன்கள் புறப் பொருட்களை நோக்கி அலைபாயாமல் ஆன்மாவில் நிலைபெற்றனவாக இருக்க வேண்டும்.

இந்த மூன்று நிபந்தனைகளும் நிறைவேறும்போது ஒருவன் மரணமற்ற நிலையை அடைகிறான். அதாவது, தான் மரணமற்ற ஒருவன் என்பதை உணர்கிறான். ஆனாலும்
அவன் தொடர்ந்து வாழ வேண்டும். ஏனெனில் பிராரப்த கர்மம் அதாவது எந்த வினைப்பயனை அனுபவிப்பதற்காக அவன் பிறந்தானோ அந்தக் கர்மம் தீரும்வரை அவன் வாழ்ந்தேயாக வேண்டும். அந்த வாழ்க்கை பிறருக்குப் பயன் தருவதாக அமைகிறது. அவன் அடைய வேண்டியது எதுவும் இல்லை. ஆனால் அவனது வாழ்வு மற்றவர்களும் அந்த நிலையை அடைவதற்கு ஒரு தூண்டுகோலாக அமைகிறது. சுவாமி விவேகானந்தர் தமது துறவியின் பாடலில் இவ்வாறு கூறுகிறார்.

இன்பம் துன்பம் என்கின்ற இருநிலை கடந்த இடம் அடைந்து
எங்கும் போய் அன்னோர் கதிபெற மாயை இருள் தீர்ப்பாய்
கருமம் அதனின் பிடிப்பெல்லாம் கழியும் மட்டும் நிதம் முயன்று
நிரந்தரமாகத் தளை நீக்கி நிலவச் செய்வாய் ஆன்மாவை,
என்றும் இனிமேல் பிறப்பில்லை.

துறவினாலும் ஆன்மீக சாதனைகளாலும் ஒருவன் தான் ஆன்மா என்பதை உணர்ந்து, மரணமற்ற நிலையை அடைகிறான். பிறகு, கர்மம் தீரும்வரை இந்த உலகில் வாழ்ந்து உடல் விழும்போது இறைநிலையை அடைகிறான்.

ஆன்ம ஞானியின் உடல் விழும்போது என்ன நடக்கிறது?: 7-8

உடம்பு என்பது உருவாகியது. எனவே அது அழிந்தே தீரும். அதையே நாம் மரணம் என்கிறோம். சாதாரண மனிதனும் மரணத்திற்கு  உள்ளாகிறான். ஆன்ம ஞானியும் மரணத்திற்கு உள்ளாகிறான். இருவரின் மரணத்தில் ஏதாவது வேறுபாடு உண்டா? உண்டு.

சாதாரண மனிதன் இறக்கும்போது தூல உடம்பு மட்டுமே அழிகிறது. மனம், பிராணன் போன்றவை அடங்கிய நுண்ணுடம்பு பயணத்தைத் தொடர்கிறது. ஆனால் ஞானி மரணமடையும்போது தூல உடம்பு மட்டுமின்றி நுண்ணுடம்பும், தான் எவற்றால் ஆக்கப்பட்டதோ, அந்தப் பகுதிகளாகப் பிரிந்து கரைந்துவிடுகிறது. அதுபற்றி இந்த 2 மந்திரங்கள் கூறுகின்றன.

கதா: கலா: பஞ்சதச ப்ரதிஷ்ட்டா
தேவாச்ச ஸர்வே ப்ரதிதேவதாஸு/
கர்மாணி விஜ்ஞானமயச்ச ஆத்மா
பரேஸவ்யயே ஸர்வ ஏகீ பவந்தி //7//

பஞ்சதச - பதினைந்து; கலா: - கலைகள்: ப்ரதிஷ்ட்டா: - இருப்பிடத்தை: கதா: -  அடைகின்றன; ஸர்வே - எல்லா: தேவா: - ச - அதிஷ்டான தேவதைகளும்: ப்ரதிதேவதாஸு  - தங்கள் தேவர்களை; கர்மாணி - வினைப்பயன்கள்: விஜ்ஞானமய: - உணர்வு வடிவான: ஆத்மா - ஆன்மா: அவ்யயே பரே - அழிவற்ற மேலான பொருளில்; ஸர்வே - எல்லாம்: ஏகீ பவந்தி - ஒன்றாக ஆகின்றன.

7. பதினைந்து கலைகளும் அவற்றின் இருப்
பிடத்தை அடைகின்றன. அதிஷ்டான தேவதைகள்
தங்கள் தேவர்களை அடைகிறார்கள். வினைப்பயன்
களும், உணர்வு வடிவான ஆன்மாவும் அழிவற்ற
மேலான பொருளை அடைந்து எல்லாம் ஒன்றா
கின்றன.

கலைகள்: எவற்றால் உடம்பும் மனமும் ஆக்கப்பட்டுள்ளதோ அவையே கலைகள். அவை பதினாறு - பிராணன், சிரத்தை, வெளி, காற்று, நெருப்பு, நீர், பூமி, புலன்கள், மனம், உணவு, வலிமை, புலனடக்கம், மந்திரங்கள், சடங்குகள், உலகங்கள், உலகிலுள்ள பெயர்கள்.

1. பிரச்ன உபநிஷதம் 6:4.1

இவற்றில் தனிநபர் சம்பந்தப்பட்டவையும் உள்ளன, பிரபஞ்ச நிலையில் உள்ளவையும் அடங்குகின்றன. பிரபஞ்ச நிலையிலுள்ள உலகங்கள், பெயர்கள் போன்றவற்றின் அம்சம் நம்மில் உள்ளது. மரண வேளையில் இந்தக் கலைகள் அவற்றின் பிரபஞ்ச நிலையை அடைகின்றன. தனிநபர் பிராணன் பிரபஞ்சப் பிராணனை அடைகிறது. தனிநபரின் மனம் பிரபஞ்ச மனத்தில் கரைகிறது. இவ்வாறே ஒவ்வொன்றும், அனைத்தும் தனிநபர் தன்மையை இழந்து பிரபஞ்சப் பரிமாணத்தில் ஒடுங்குகின்றன.

தேவதைகளும் தேவர்களும்: காண்கின்ற புறவுலகை இயக்குகின்ற தூல சக்திகள் ஆயினும் சரி. காணாத அகவுலகை இயக்குகின்ற சூட்சும சக்திகள் ஆயினும் சரி ஒவ்வொன்றையும் ஒரு தெய்வமாகக் கண்டனர். உபநிஷத ரிஷிகள். இந்த தெய்வங்கள் தனிநபர் நிலையில் நமது உடம்பு, மனம் ஆகியவற்றை இயக்கும்போது அபிமானி தேவதை அல்லது அதிஷ்டான தேவதை என்று வழங்கப்படுகின்றனர். பிரபஞ்ச நிலையில் பொதுவாக தேவர்கள் எனப்பட்டனர். உதாரணமாக சூரியனுக்கும் கண்ணுக்கும் அதிஷ்டான தேவதை அர்யமான், பகலுக்கும் பிராணனுக்கும் அதிஷ்டான தேவதை மித்ரன். ஒருவன் பிரம்ம ஞானம் பெறும்போது அதிஷ்டான தேவதைகள் பிரபஞ்ச நிலையிலுள்ள தங்கள் தேவர்களுடன் கலந்துவிடுகின்றனர்.

வினைப்பயன்கள்: நாம் செய்கின்ற செயல்கள் அனைத்தும் ஒரு பலனை உண்டாக்குகின்றன. இந்தப் பலன் ஒரு பதிவாக ஆழ்மனத்தில் சேமிக்கப்படுகிறது. இதுவே சம்ஸ்காரம். இவற்றின் தொகுதிக்கேற்ப, அதாவது வினைப்பயன்களுக்கு ஏற்ப வாழ்க்கை அமைகிறது. இந்த வினைப்பயன் ஒரு வாழ்க்கையில் ஏற்பட்டது மட்டுமல்ல; எத்தனையோ பிறவிகளின் நாம் செய்த வினைகளின் பலன்கள் மனத்தில் உள்ளன. இறைவனை அடைந்தவனின் அனைத்து கர்மங்களும், அதாவது அனைத்து வினைப்பயன்களும் அழிகின்றன. இனி பிறவியே இல்லாமல் போகிறது.

ஆன்மா- இறைவன்: இறைவனே நம்மில் ஆன்மாவாக விளங்குகிறார் என்பதை ஏற்கனவே (2:2.7) கண்டோம். இறையனுபூதியில் இந்தப் பிரிவு விலகிவிடுகிறது. ஆன்மா- இறைவன் என்ற வேறுபாடு விலகி அனைத்தும் ஒன்றாகிறது.

இதனை ஓர் உதாரணத்தின்மூலம் அடுத்த மந்திரம் விளக்குகிறது.

யதா நத்ய ஸ்யந்தமானா: ஸமுத்ரே-
ஸஸ்தம் கச்சந்தி நாமரூபே விஹாய/
ததா வித்வான் நாமரூபாத் விமுக்த:
பராத்பரம் புருஷமுபைதி திவ்யம் //8//

ஸ்யந்தமானா: - பெருகி ஓடுகின்ற: நத்ய: - நதிகள்: யதா - எவ்வாறு: நாமரூபே - பெயர் உருவத்தை: விஹாய - விட்டு: ஸமுத்ரே - கடலில்: அஸ்தம் கச்சந்தி - கலக்கின்றனவோ: ததா - அவ்வாறு: வித்வான் -  உண்மையை உணர்ந்தவன்; நாமரூபாத் - பெயர் மற்றும் உருவத்திலிருந்து: விமுக்த: - விடுபட்டு: பராத்பரம் - உயர்ந்தவற்றுள் உயர்ந்த: திவ்யம் - ஒளிவடிவான: புருஷம் - பரம்பொருளை; உபைதி - அடைகிறான்.

8. பெருகி ஓடுகின்ற நதிகள் தங்கள் பெயரையும்
வடிவத்தையும் இழந்து கடலில் கலக்கின்றன.
உண்மையை உணர்ந்தவன், அதுபோல், தனது
பெயர் மற்றும் உருவத்திலிருந்து விடுபட்டு,
உயர்ந்தவற்றுள் உயர்ந்தவரும் ஒளிவடிவானவரும்
ஆன பரம்பொருளை அடைகிறான்.

இறையனுபூதியின் விளைவு:

ஸ யோ ஹ வை தத்பரமம் ப்ரஹ்ம வேத
ப்ரஹ்மைவ பவதி நாஸ்ய அப்ரஹ்மவித் குலே பவதி/
தரதி சோகம் தரதி பாப்மானம்
குஹாக்ரந்திப்யோ விமுக்தோ ஸம்ருதோ பவதி //9//

ய: ஹ வை -யார்: தத் - அந்த: பரமம் - மேலான: ப்ரஹ்ம - பரம்பொருளை; வேத - உணர்ந்திருக்கிறானோ: ஸ: -அவன்: ப்ரஹ்ம ஏவ - பரம்பொருளாகவே; பவதி-ஆகிறான்; அஸ்ய- அவனது; குலே- வம்சத்தில்; அப்ரஹ்ம வித் - பிரம்ம ஞானி அல்லாதவன்; ந பவதி - பிறக்க மாட்டான்; சோகம் - கவலை; பாப்மானம்- பாவம்; தரதி -  கடக்கிறான்: குஹாக்ரந்திப்ய - மனக்கோணல்கள்: விமுக்த: - விடுபடுகிறான்; அம்ருத: - அழிவற்றவனாக: பவதி - ஆகிறான்.

9. மேலான பரம்பொருளை உணர்ந்தவன் பரம்
பொருளாகவே ஆகிறான், பிரம்ம ஞானி அல்லாத
யாரும் அவனது குலத்தில் பிறக்க மாட்டான். அவன்
கவலையும் பாவமும் அற்றவன் ஆகிறான்.
மனக்கோணல்களிலிருந்து விடுபடுகிறான்.

இறைவனை உணர்கின்ற ஒருவன் எப்படி பரம் பொருளாகவே ஆகிறான். அதாவது தன் தனித்துவத்தை இழந்து ஒருமையுணர்வில் நிலைக்கிறான் என்பதை 7-8 மந்திரங்களில் கண்டோம்.

இறையனுபூதி பெற்ற ஒருவனின் குலத்தில் பிரம்ம ஞானிகளே அதாவது இறையனுபூதி பெற்றவர்களே பிறப்பார்கள். இங்கே குலம் என்பதை பரம்பரை என்று கொள்ள வேண்டும் என்று விளக்குகிறார் சுவாமி பூதேஷானந்தர். இறையனுபூதி பெற்ற ஒருவரின் வழிகாட்டுதலின்படி சாதனைகள் செய்பவன் கவலையும் பாவமும் அற்றவன் ஆகிறான்; மனக்கோணல்களிலிருந்து விடுபடுகிறான். இறுதியாக இறையனுபூதியும் பெறுகிறான்.

உயர் உண்மைகளை யாருக்குச் சொல்வது?

உபநிஷதங்களையும் அதுபோன்ற உயர் உண்மைகளையும் தகுதி வாய்ந்தவர்களிடம் மட்டுமே சொல்ல வேண்டும். யாரிடம் சொன்னால், அவர்கள் சாதனைகள் செய்து இறையனுபூதிக்காக முயல்வார்களோ அவர்களுக்கு மட்டுமே சொல்ல வேண்டும்.

ததேதத் ரிசாஸப்யுக்தம் -
க்ரியாவந்த: ச்ரோத்ரியா ப்ரஹ்மநிஷ்ட்டா:
ஸ்வயம் ஜுஹ்வத ஏகர்ஷிம் ச்ரத்தயந்த:/
தேஷாமேவைதாம் ப்ரஹ்மவித்யாம் வதேத
சீரோவ்ரதம் விதிவத்யைஸ்து சீர்ணம் //10//

தத் ஏதத் - இது: ரிசா - மந்திரத்தால்: அப்யுக்தம் - கூறப்படுகிறது; க்ரியாவந்த - சாதனைகள் செய்பவன்: ச்ரோத்ரியா: - கற்றுணர்ந்தவன்; ப்ரஹ்மநிஷ்ட்டா: - இறைவனில் நிலைபெற்றவன்: ச்ரத்தயந்த: - சிரத்தை உள்ளவன்: ஏகர்ஷிம் - அக்கினியில்: ஸ்வயம் - தன்னை: ஜுஹ்வத - சமர்ப்பிப்பவன்: சிரோவ்ரதம் - சிரோவிரதத்தை: விதிவத் - சாஸ்திர விதிகளின்படி: சீர்ணம் - கடைப்பிடிப்பவன்; யை; து - யாரால்: தேஷாம் ஏவ - அவர்களுக்கு மட்டுமே: ஏதாம் - இந்த: ப்ரஹ்மவித்யாம் - ஆன்மீக ஞானத்தை: வதேத - சொல்ல வேண்டும்.

10. வேத மந்திரங்களில் இவ்வாறு கூறப்
பட்டுள்ளது; சாதனைகள் செய்பவன் கற்றுணர்ந்
தவன், இறைவனில் நிலைபெற்றவன், சிரத்தை
உள்ளவன், தன்னையே ஆஹுதியாக அளித்து
வாழ்பவன், சாஸ்திர விதிகளின்படி சிரோவிரதத்தைக்
கடைப்பிடிப்பவன்-இத்தகையோருக்கு மட்டுமே
ஆன்மீக ஞானத்தை அளிக்க வேண்டும்.

சிரோ விரதம் என்றால் தலையில் அக்கினியை வைத்துக் கொண்டு செய்யப்படுகின்ற ஒரு சாதனை, இதுபற்றி அதர்வண வேதம் கூறுகிறது. அதாவது சாதனைகளைத் தவறாமல் செய்பவனிடம் மட்டுமே உயர் உண்மைகளைக் கூற வேண்டும் என்பதை உபநிஷதத்திற்கு ஒரு பின்னுரையாகக் கூறுகிறது இந்த மந்திரம்.

மாமுனிவர்களுக்கு வணக்கம்:

ததேதத் ஸத்யம் ரிஷிரங்கிரா: புரோவாச நைததசீர்ணவ்ரதோஸதீதே/
நம: பரமரிஷிப்யோ நம: பரமரிஷிப்ய: //11//

தத் ஏதத் - இந்த: ஸத்யம் - உண்மையை; அங்கிரா: - அங்கிரஸ்: ரிஷி: - முனிவர்: புரா - முன்பு: உவாச - கூறினார்: அசீர்ணவ்ரத: - சாதனைகள் செய்யாதவன்; ஏதத் - இதனை: ந அதீதே - படிக்க கூடாது; பரமரிஷிப்ய: -மாமுனிவர்களுக்கு; நம - வணக்கம்.

11. முன்பு இந்த உண்மையை அங்கிரஸ் என்ற
முனிவர் உபதேசித்தார். சாதனைகள் செய்யாதவன்
இந்த உபநிஷதத்தைப் படிக்கக் கூடாது.
இந்த உபநிஷத உண்மைகளை அளித்த மாமுனிவர்
களுக்கு வணக்கம், மாமுனிவர்களுக்கு வணக்கம்.

சாதனை வாழ்க்கை என்ற ஒன்றை மட்டுமே நோக்கமாகக் கொண்டவன்தான் உபநிஷதங்களைப் படிக்க வேண்டும் என்பதை இந்த மந்திரம் ஓர் எச்சரிக்கைபோல் கூறுகிறது. சாதனை வாழ்க்கையில் முன்னேறுவதற்காக மாமுனிவார்களைப் பணிவதுடன் உபநிஷதம் நிறைவுறுகிறது.

இதி முண்டகோபநிஷதி த்ருதீய முண்டகே த்விதீய: கண்ட://

ஓம் பத்ரம் கர்ணேபி: ச்ருணுயாம தேவா: பத்ரம்
பச்யேமாக்ஷபிர் யஜத்ரா: ஸ்திரைரங்கைஸ்
துஷ்ட்டுவாக்ம்ஸஸ்தனூபி: வ்யசேம தேவஹிதம் யதாயு:

ஸ்வஸ்தி ந இந்த்ரோ வ்ருத்த ச்ரவா: ஸ்வஸ்தி ந: பூஷா விச்வ
வேதா: ஸ்வஸ்தி நஸ்தார்க்ஷ்யோ அரிஷ்ட்டநேமி: ஸ்வஸ்தி நோ
ப்ருஹஸ்பதிர் ததாது// ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி: //


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !