சதுரகிரி மலைக்கு செல்ல சிறப்பு அனுமதி: ஜூன் 17 வரை பக்தர்கள் சென்றுவர ஏற்பாடு!
வத்திராயிருப்பு: நேற்று ஒரே நாளில் பிரதோஷம் ,சிவராத்திரி தினம் வந்ததால் சதுரகிரி
மலைக்கு செல்ல அடிவாரத்தில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். மலைக்கு பக்தர்கள் செல்ல தடை உள்ளதால் அனுமதி மறுக்கப்பட்டது. நுழைவாயிலில் பக்தர்கள் போராட்டம் செய்ய முயன்றதை தொடர்ந்து போலீசார் சிறப்பு அனுமதி பெற்று அவர்களை மலைக்கு அனுப்பினர்.
சதுரகிரி மலையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையிலிருந்து கீழே இறங்க முடியாமல் வெள்ளத்தில் சிக்கினர். ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தை கடக்க முயன்ற 9 பேர் நீரில் அடித்துச்செல்லப்பட்டு இறந்தனர். இதனால் மலைக்கு பக்தர்கள் செல்ல 2 மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
அமாவாசை, பவுர்ணமி தினங்களில் மட்டும் தலா 3 நாட்கள் பக்தர்கள் சென்றுவர அனுமதி
வழங்கப்பட்டது. ஜூன் 2 பவுர்ணமியைத் தொடர்ந்து 3 நாட்கள் பக்தர்கள் மலைக்கு செல்ல
அனுமதிக்கப்பட்டனர். அதன்பின் மலையில் இருந்த அனைத்து பக்தர்களும் போலீசாரால்
இறக்கிவிடப்பட்டனர்நாளை (ஜூன் 16 ) அமாவாசை வழிபாடு நடக்க உள்ளது. இதற்கு இன்று
முதல் ஜூன் 17 வரை மலைக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் நேற்று (ஜூன் 14 )
பிரதோஷம், சிவராத்திரி என ஒரேநாளில் வந்ததாலும், ஞாயிறு விடுமுறை என்பதாலும்
ஏராளமான பக்தர்கள் தடை உத்தரவு தெரியாமல் மலை அடிவாரத்தில் குவிந்தனர்.அவர்கள்
மலைக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. சென்னை, காஞ்சிபுரம், வேலூர், ஈரோடு, சேலம்,
புதுச்சேரி உட்பட வடமாவட்டங்களில் இருந்து வந்த பக்தர்கள் பெருத்த ஏமாற்றத்துடன் 2 மணி நேரமாக அடிவாரத்திலே காத்திருந்தனர். நீண்ட தொலைவிலிருந்து வந்திருப்பதால் தாங்களை மலைக்கு செல்ல அனுமதிக்குமாறு கோரினர்.
வனத்துறையினர், போலீசார் மறுத்தனர்.பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்ததும் மலைக்கு அனுமதிக்க கோரி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து போலீசார் மற்றும் வனத்துறையினர் மதுரை,விருதுநகர் கலெக்டர்கள், எஸ்.பி. ஆகியோரிடம் சிறப்பு அனுமதி பெற்றனர். இதன்பின் காலை 9 மணிமுதல் பக்தர்கள் மலையேறினர். அடிவாரத்தில் பக்தர்கள் பெயர், முகவரியை பதிந்து கையொப்பமிட்ட பின் மலையேற அனுமதிக்கப்பட்டனர்.