மயிலம் கோவிலில் கிருத்திகை விழா!
மயிலம்: மயிலம் முருகன் கோவிலில் வைகாசி கிருத்திகை விழா நடந்தது. மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் சுவாமி கோவிலில், நேற்று வைகாசி மாத கிருத்திகையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு நடந்தது.
இதே போல் மலையடிவாரத்திலுள்ள சுந்தர விநாயகருக்கு நேற்று காலை நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மதியம் 11:00 மணிக்கு கோவில் வளாகத்திலுள்ள விநாயகர், வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர், பாலசித்தர், நவகிரக சுவாமிகளுக்கு அபிஷேகம்,மகா தீபாராதனை நடந்தது. பின் மூலவர் தங்ககவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாளித்தார். மதியம் 1:00 மணிக்கு கோவில் மண்டபத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கோபுரவாசல் எதிரில் பெண்கள் பொங்கலிட்டு சுவாமிக்கு படையலிட்டனர். இரவு 8:00 மணிக்குஉற்சவர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து நடந்த கிரிவலத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை மயிலம் ஆதினம் 20 பட்டம் சிவஞான பாலயசுவாமிகள் சிறப்பாகசெய்திருந்தார்.