திருத்தணி முருகன் கோவில் ஆடிக்கிருத்திகை ஆலோசனைக் கூட்டம்
திருத்தணி : திருத்தணி முருகன் கோவில் ஆடிக்கிருத்திகை ஆலோசனைக் கூட்டம், ஆர்.டி.ஓ., ரவீந்திரன் தலைமையில் நடந்தது. விழாவுக்கு வரும் பெண் பக்தர்கள், கோவில் நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட முடி காணிக்கை மண்டபங்களில் மொட்டையடித்து ரசீது பெற்றுக்கொண்டால், அவர்கள், மூலவரை 100 ரூபாய் சிறப்பு கட்டண நுழைவாயில் வழியாக சென்று இலவசமாக தரிசனம் செய்யலாம் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆடிக்கிருத்திகை திருவிழா, வரும் 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடைபெற உள்ளது. இவ்விழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இக்கூட்டத்திற்கு கோவில் இணை ஆணையர் கவிதா வரவேற்றார். அருண் சுப்பிரமணியன் எம்.எல்.ஏ., ஒன்றிய சேர்மன் ஜோதி முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில், ஆர்.டி.ஓ., ரவீந்திரன் பேசுகையில், பக்தர்கள் கூடும் இடங்களில் சுகாதார வசதிகள் செய்து தரவேண்டும். பக்தர்களின் வசதிக்காக நான்கு இடங்களில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்றார். இதில், திருத்தணி டி.எஸ்.பி., மாணிக்கம், மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் சம்பத், கலந்து கொண்டனர்.