திருத்தணி முனீஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்!
திருத்தணி: திருத்தணி அருகே, முனீஸ்வரர் கோவிலில் நேற்று, மூன்றாம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.
திருத்தணி ஒன்றியம், எஸ்.அக்ரஹாரம் ஊராட்சிக்குட்ட குடிகுண்டா கிராமத்தில், முனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நேற்று முன்தினம், மூன்றாம் ஆண்டு கும்பாபிஷேகத்தை ஒட்டி கோவில் வளாகத்தில், மூன்று யாக சாலைகள், ஐந்து கலசங்கள் அமைத்து, கணபதி ஹோமம் நடத்தப்பட்டது. நேற்று காலை, 8:00 மணிக்கு, யாக சாலை பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது.
காலை, 9:30 மணிக்கு, கலசங்கள் ஊர்வலமாக புறப்பட்டு, மூலவர் முனீஸ்வரருக்கு கலசநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, மூலவருக்கு வண்ண மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மதியம், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை,
கிராமவாசிகள் செய்திருந்தனர்.