கோவிந்தா கோஷம் முழங்க அழகிரிநாதர் கும்பாபிஷேகம்
சேலம் : சேலம் மாநகரில் பிரசித்தி பெற்ற கோட்டை அழகிரிநாதர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, யாகசாலை பூஜைகள் ஜூலை 8ல் துவங்கியது. நேற்று முன்தினம் மாலையில் மஹா சாந்தி, விசேஷ திருமஞ்சனம், மஹாசாந்தி பூர்ணாகுதி, கும்ப திருமஞ்சனம், நீராட்ட சேவை, புண்ணியாஹம், ஆராதநம், அக்னிப்ரணயநம், தேவேச பிரதிசரம், சயனாதிவாஸம், சதுர்வேத பாராயணம், நித்ய ஹோமம், பிரதான மூல மந்திர ஹோமங்கள், பூர்ணாகுதி, சாற்று முறை, தாலாட்டு சேவை ஆகியன நடந்தது. நேற்று அதிகாலையில் சுப்ரபாதம், புண்ணியாஹம், ஸ்தபநம், ஆராதநம், நித்ய ஹோமம், தஷிணாதானம், மஹாபூர்ணாகுதி, வேத, இதிகாஸ புராண, பிரபந்த சாற்று முறை, கடங்கள் புறப்பாடு, கும்ப பிராயணம் ஆகியன நடந்தது. தொடர்ந்து விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. எம்.பி., செம்மலை, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். கும்பாபிஷேகத்தை சுதர்சன பட்டாச்சாரியார், சீனிவாச பட்டாச்சாரியார் தலைமையில், 100க்கும் மேற்பட்ட பட்டாச்சாரியார்கள் நடத்தினர். கலெக்டர் மகரபூஷணம், எம்.எல்.ஏ.,க்கள் செல்வராஜ், மோகன்ராஜ் உட்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு "கோவிந்தா கோஷம் முழங்க அழகிரிநாதர் சமேத சுந்தரவள்ளி தாயாரை வழிபட்டனர். தொடர்ந்து ஸர்வதரிசனம், தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. மாலையில் திருக்கல்யாணம், திருவீதி புறப்பாடு ஆகியன நடந்தது. கும்பாபிஷேக ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி முத்துசாமி, சுந்தர்ராஜ பெருமாள் பக்த சபா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பக்த சபா நிர்வாகிகள் செய்தனர்.