வர்ணமுத்து மாரியம்மன் கோவிலில் மிளகாய் சாந்து அபிஷேகம்
புதுச்சேரி : இடையஞ்சாவடி வர்ணமுத்து மாரியம்மன் கோவில் செடல் திருவிழாவில், மிளகாய் சாந்து அபிஷேகம் நேற்று நடந்தது. விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகில் உள்ள இடையஞ்சாவடி வர்ண முத்து மாரியம்மன் கோவில் செடல் திருவிழாவில் நடக்கும் மிளகாய் சாந்து அபிஷேகம் பிரசித்தி பெற்றது. இக்கோவில் செடல் திருவிழா கடந்த 5ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் விநாயகர், முருகர், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு வீதியுலா நடந்தது. நேற்று மாலை 3 மணிக்கு தீக்குண்டம் ஏற்றப்பட்டது. மாலை 4 மணிக்கு மூன்று பேரை வர்ணமுத்து மாரியம்மன், இளங்காளியம்மன், அங்காளம்மனாக பாவித்து, அவர்களுக்கு எண்ணெய், பன்னீர், விபூதி, மஞ்சள் உள்ளிட்ட 108 திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் சிறப்பு அம்சமாக மிளகாய் சாந்து அபிஷேகமும், பின் அவர்கள் மிளகாய் சாந்து குடிக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. பக்தர்கள் செடல் போட்டும், தீக்குண்டம் இறங்கியும் நேர்த்திக் கடன் செலுத்தினர்.