பாலசுப்பிரமணியசுவாமி கோயில் கும்பாபிஷேகம் காண்பது எப்போது...
பெரியகுளம் : பெரியகுளம் பாலசுப்பிரமணியசுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடத்த அரசு முன்வர வேண்டும். மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் வராகநதியின் தென்கரையில் இக்கோயில் அமைந்துள்ளது.(10ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது). சுப்பிரமணியர், ராஜேந்திரசோழீஸ்வரர் (சிவன்), அறம்வளர்த்த நாயகி (அம்பாள்) ஆகிய மூன்று சந்நிதிகளும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளன. ஒவ்வொரு சந்நிதிக்கும் ஒரு கொடிமரமாக மூன்று கொடி மரங்கள் உள்ளன. காசிக்கு அடுத்தாற் போல் இக்கோயில் வராகநதி கரையோரங்களில் எதிர், எதிராக ஆண், பெண் மருதமரம் அமைந்துள்ளது. திருவிளையாடல் புராணத்தில் பன்றிகளுக்கு மோட்சம் கொடுத்த இடம் இத்திருத்தலம் இதனை விளக்கும் வகையில் அரிய சிற்பங்கள், சுப்பிரமணியர் சந்நிதியில் வடிவமைக்கப்பட்டுள்ளன. பிணி நீங்க வேண்டி வேண்டுபவர்களுக்கு நல்ல பலன் உண்டு. வெளி மண்டபத்தில் ருத்ர தாண்டவமூர்த்தியின் சிலை வடிவமைப்பு நாயக்கர் கால கலைப்பெட்டகமாகும். நெடிதுயர்ந்து நிற்கும் துர்க்கையின் தோற்றம் தமிழக சிற்பகலையின் மேன்மையாகும். கோயிலிலன் தல விருட்சம் நெய்கொட்டலான்மரம். அணிகலன் செய்வோர்க்கு அருமருந்தாக மரத்தின் காய்கள் உள்ளது. கும்பாபிஷேகம்: இக்கோயில் கும்பாபிஷேகம் 1998ம் ஆண்டு பிப்.,9ம்ல் நடந்தது. கோயிலுக்கான கும்பாபிஷேக பணி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால கோயில் சுற்றுப்புற சுவர்கள், சுவாமி சிலைகள், கதவுகள் சேதமடைந்துள்ளன. இவற்றை மராமத்து செய்ய வேண்டும். கும்பாபிஷேகம் விரைவில் நடத்த வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். கோயில் நிர்வாக அலுவலர் சுதா கூறுகையில், கோயில் கும்பாபிஷேகம் விரைவில் நடத்த ஏற்பாடு செய்ய உள்ளோம். இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளோம்,என்றார்.