ராமநாதபுரம் அம்மன் கோயில்களில் ஆடிவெள்ளி சிறப்பு பூஜை!
கீழக்கரை: ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமை விசேஷ தினம் என்பதால், அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.கீழக்கரை, தட்டார் தெருவில் உள்ள உக்கிர வீரமா காளியம்மன் கோயிலில் அம்மனுக்கு 18 வகையான அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. பெண்கள் சக்தி ஸ்தோத்திரம், பஜனை, நாமாவளி பாடினர். ஏற்பாடுகளை விஸ்வக்கிய தங்கம்வெள்ளி தொழிலாளர் சங்கத்தினர் செய்திருந்தனர்.பரமக்குடி முத்தாலம்மன் கோயிலில் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து பக்தர்கள் வழிபட்டனர். அவர்களுக்கு கூழ் வழங்கப்பட்டது. பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில், சவுந்தரவல்லித் தாயார் மாலை 6 முதல் இரவு 9 மணி வரை ஊஞ்சல் சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இதேபோல், ராமநாதபுரம் வெட்டுடையாள் காளியம்மன், சேதுபதி நகர் மல்லம்மாள், மாரியம்மன், வழுதூர், வாலாந்தரவை வாழவந்த அம்மன், மண்டபம் ஓடைத்தோப்பு சந்தனபூமாரி அம்மன், அம்பலகாரத்தெரு கூனி மாரியம்மன் உள்ளிட்ட கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு கூழ் வழங்கப்பட்டது.