உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னிமலை முருகபெருமானுக்கு 751 குடம் பாலாபிஷேகம்!

சென்னிமலை முருகபெருமானுக்கு 751 குடம் பாலாபிஷேகம்!

சென்னிமலை: சென்னிமலை மலை மீதுள்ள சுப்பிரமணிய ஸ்வாமிக்கு, 751 குடம் பாலாபிஷேக பெருவிழா வரும், 26ம் தேதி நடக்கிறது. சென்னிமலையில் புகழ்பெற்ற முருகன் கோவிலான சுப்பிரமணியர் சுவாமி கோவில், மலை மீது அமைந்துள்ளது. முருகப்பெருமான் திருப்புகழை தந்த அருணகிரி நாதருக்கு, படிகாசு நல்கியது, புண்ணாக்கு சித்தர், செங்கந்துறை பூசாரி, வேட்டுவபாளையம் பூசாரி போன்ற முனிவர்களுக்கு, திருக்கோல காட்சி தந்ததும், கந்தர் சஷ்டி கவசம் அரங்கேறியதும், 1,320 படிகள் வழியாக இரட்டை மாட்டு வண்டி மலையேறிய சிறப்பும் கொண்ட ஸ்தலமாகும். மலை மீதுள்ள சுப்பிரமணியருக்கு, ஆடி விசாக நட்சத்திரத்தில், சென்னிமலை கைத்தறி மற்றும் சாய சாலை உரிமையாளர்கள் சங்கம் சார்பில், பாலபிஷேக பெருவிழா நடத்தப்படும். வரும், 26ம் தேதி, 48வது ஆண்டாக, 751 குடம் பாலபிஷேக விழா நடக்கிறது. அன்று காலை, 5.45 மணிக்கு, 751 திருப்பாற் குடங்கள் உரிய சிறப்புடன், சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் இருந்து புறப்பட்டு, மேளா தாளத்துடன் திருவீதி வலம் வந்து, மலை கோவிலை அடையும். காலை, 10.30 மணிக்கு மலை மேல் சுப்பிரமணியருக்கு பாலபிஷேகம் நடக்கும். தொடர்ந்து சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனையும், மதியம், 12.30 மணிக்கு உற்சவ மூர்த்தி பிரகார உலாக்கட்சி நடக்கிறது. மதியம் பக்தர்கள் அனைவருக்கும், மலை மீது அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை, கைத்தறி மற்றும் சாய சாலை உரிமையாளர்கள் சங்க தலைவர் முத்துசாமி, துணை தலைவர் ஈஸ்வர்மூர்த்தி, செயலாளர் ராமலிங்கன், பொருளாளர் சாமிநாதன், மேலாளர் காளிமுத்து ஆகியோர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !