விநாயகர் சதுர்த்திக்காக சிலைகள் பணி தீவிரம்
காஞ்சிபுரம்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, காஞ்சிபுரம் அருகில், விநாயகர் சிலை செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.விநாயகர் சதுர்த்தி விழா, அடுத்த மாதம் 17ம் தேதி நடக்க இருக்கிறது. இதில், பல்வேறு விதமான விநாயகர் சிலைகள் வைத்து, பக்தர்கள் வழிபடுவர். இதற்காக, காஞ்சிபுரம் அடுத்த அய்யம்பேட்டை பகுதியில், விநாயகர் சிலைகள் செய்யப்பட்டு வருகின்றன.இங்கு, 3 அடி முதல், 16 அடி வரையிலான பல்வேறு சிலைகள் செய்யப்பட்டு வருகின்றன. காளி விநாயகர், சிவ பார்வதி விநாயகர், வெண்ணெய் குடத்தில் விநாயகர், சிவன் விஷ்ணு விநாயகர், நடன விநாயகர் போன்ற வடிவமைப்பிலான சிலைகளை, பேப்பர், கிழங்கு மாவு கலந்து செய்து வருகின்றனர்.ஒரு சிலை, 600 ரூபாயில் இருந்து, 12 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதை காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை போன்ற பகுதியினர் வந்து, வாங்கிச் செல்கின்றனர்.இதுகுறித்து, சிலை செய்யும் ரமேஷ் கூறுகையில், பல்வேறு பகுதியில் இருந்து வருபவர்கள் சொல்லும் மாடலில் செய்து தருவோம்; நாங்கள் செய்து வைத்துள்ள சிலைகளையும் வாங்கிச் செல்வர். எளிதில் கரையக் கூடிய காகிதக் கூழ் வைத்து செய்வதால், எடுத்துச் செல்வதற்கு எளிதாக இருக்கும். அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ற விலையிலும் செய்து கொடுக்கிறோம், என்றார்.