பெரிய மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கோலாகலம்
ஆட்டையாம்பட்டி: ஆட்டையாம்பட்டி பெரிய மாரியம்மன் கோவில் தேரோட்டம், கோலாகலமாக நேற்று, நடந்தது. எட்டுபட்டிக்கு சொந்தமான ஆட்டையாம்பட்டி பெரிய மாரியம்மன் கோவில் தேர்திருவிழா, கடந்த, 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம், ஆட்டையாம்பட்டி கறிகடைகாரர்கள் மற்றும் தோல் வியாபாரிகள் சங்கம் சார்பில், வாண வேடிக்கை, நையாண்டி மேளத்துடன் அம்மன் திருவீதி உலா நடந்தது. தொடர்ந்து, நேற்று காலை, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, மாவிளக்கு ஏற்றி கூழ் ஊற்றுதல் நிகழ்ச்சிகள் நடந்தது. மாலை, 2 மணிக்கு, கோவில் தர்மகர்த்தா ரகுராஜ் தலைமையில், அம்மன் திருத்தேரில் எழுந்தருளி, பக்தர்களால் திருத்தேர் வடம் பிடித்து, திருவீதி வழியாக தேர்த்திருவிழா நடந்தது. பின்னர், டி.வி., திருமலை நினைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. முன்னதாக, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுடன், தலைமை பூசாரி குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. விழாவில், ஆட்டையாம்பட்டி, பாப்பாரப்பட்டி, பைரோஜி, பாலம்பட்டி, சென்னகிரி, மருளையாம்பாளையம், முத்தண்னம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த மக்கல் கலந்து கொண்டனர். நேற்றிரவு, இன்னிசை கச்சேரி, அம்மன் ஊர்வலம் நடந்தது. இன்று (ஆக., 13) அதிகாலை முதல், பக்தர்கள் பொங்கல் வைத்தல், வேல் அலகு, உரல் அலகு, கார் அலகு, விமான அலகு குத்துதல் நிகழ்ச்சிகள் நடக்கும். மாலையில், கம்பம் பிடுங்குதல், இரவு கலை நிகழ்ச்சியும் நடக்கிறது. நாளை காலை, அம்மன் ஊஞ்சல் உற்சவத்துடன், மஞ்சள் நீராட்டு நடக்கிறது.